சங்கீதம் 18:1-6
சங்கீதம் 18:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன். யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு, என் அரணுமாயிருக்கிறார். துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்; அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; என் இறைவனிடம் உதவிக்காகக் கதறினேன்; அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்; என் அழுகுரல் அவருடைய செவிக்கு எட்டியது.
சங்கீதம் 18:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன். யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன். மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது.
சங்கீதம் 18:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
“எனது பெலனாகிய கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன்!” கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார். பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார். தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும். உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார். எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர். ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன். என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்! மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன. மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன். கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன. நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன். ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன். தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார். என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
சங்கீதம் 18:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக் கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.