சங்கீதம் 149:1-9
சங்கீதம் 149:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள். இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும். அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும். ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார். பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள். அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக. அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும், அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும், அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை.
சங்கீதம் 149:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
சங்கீதம் 149:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள். தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக. சீயோனின் ஜனங்கள் அவர்களின் ராஜாவோடு மகிழ்ந்து களிப்பார்களாக. தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும். கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அவர் அவர்களை மீட்டார்! தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள். ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும். அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும். அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும். தேவனுடைய ஜனங்கள் அந்த ராஜாக்களுக்கும் அங்குள்ள முக்கியமான ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள். தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள். தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
சங்கீதம் 149:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுபாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும், அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும், அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும். இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.