சங்கீதம் 148:1-14
சங்கீதம் 148:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார். பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே, அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, மலைகளே, சகல மேடுகளே, கனி மரங்களே, சகல கேதுருக்களே, காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
சங்கீதம் 148:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள். சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள். மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும். யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார். பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே, நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே, மலைகளே, குன்றுகளே, பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே, உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே, பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே, இளைஞர்களே, இளம்பெண்களே, முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள். அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது. அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள்.
சங்கீதம் 148:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். அவருடைய தூதர்களே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள். சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார். பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே, அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே, காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே, வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவை துதியுங்கள். அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
சங்கீதம் 148:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரைத் துதியுங்கள்! மேலேயுள்ள தேவ தூதர்களே, பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்! தேவதூதர்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! அவரது சேனைகள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்! சூரியனும் சந்திரனும் கர்த்தரைத் துதியுங்கள்! நட்சத்திரங்களும் வானின் விளக்குகளும் அவரைத் துதியுங்கள்! மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்! கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்! இவையனைத்தும் என்றென்றும் தொடருமாறு தேவன் செய்தார். என்றும் முடிவடையாத சட்டங்களை தேவன் உண்டாக்கினார். பூமியிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதியுங்கள்! சமுத்திரத்தின் பெரிய விலங்குகளே, கர்த்தரைத் துதியுங்கள்! தேவன் நெருப்பையும் கல்மழையையும் பனியையும் புகையையும் எல்லாவிதமான புயற்காற்றையும் உண்டாக்கினார். மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார். எல்லாக் காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் ஊர்வனவற்றையும் பறவைகளையும் தேவன் உண்டாக்கினார். பூமியின் தேசங்களையும் ராஜாக்களையும் தேவன் உண்டாக்கினார். தலைவர்களையும் நீதிபதிகளையும் தேவன் உண்டாக்கினார். இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்! அவர் நாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துங்கள்! பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்! தேவன் அவரது ஜனங்களைப் பலப்படுத்துகிறார். தேவனைப் பின்பற்றுவோரை ஜனங்கள் வாழ்த்துவார்கள். ஜனங்கள் இஸ்ரவேலை வாழ்த்துவார்கள். தேவன் அவர்களுக்காகப் போராடுகிறார்.