சங்கீதம் 147:1-7
சங்கீதம் 147:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார். யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.
சங்கீதம் 147:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
சங்கீதம் 147:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள். அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது. கர்த்தர் எருசலேமைக் கட்டினார். சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார். தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி, அவர்கள் காயங்களைக் கட்டுகிறார். தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார். நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். அவர் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார். ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள்.
சங்கீதம் 147:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.