சங்கீதம் 147:1-20
சங்கீதம் 147:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார். யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள். அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; பூமிக்கு மழையைக் கொடுத்து, மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் உணவு கொடுக்கிறார். குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; யெகோவா தமக்குப் பயந்து, தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார். எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி. ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து, சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்; அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது. அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார். அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்; அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்? அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது. அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும், தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை; அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள்.
சங்கீதம் 147:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார். எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
சங்கீதம் 147:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள். அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது. கர்த்தர் எருசலேமைக் கட்டினார். சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார். தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி, அவர்கள் காயங்களைக் கட்டுகிறார். தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார். நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். அவர் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார். ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள். தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார். தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார். தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார். போர்க் குதிரைகளும் வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள். கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள். அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார். எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி! எருசலேமே, தேவன் உன் கதவுகளை உறுதியாக்குகிறார். தேவன் உன் நகரத்தின் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார். உன் நாட்டிற்கு தேவன் சமாதானத்தைக் கொண்டுவந்தார். எனவே பகைவர்கள் போரில் உன் நாட்டுத் தானியத்தைக் கவர்ந்து செல்லவில்லை. உனக்கு உணவிற்குத் தேவையான தானியம் மிகுதியாக இருக்கிறது. பூமிக்கு தேவன் கட்டளையிடுகிறார். அது உடனே கீழ்ப்படிகிறது. நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார். தேவன் வானத்திலிருந்து கற்களைப்போல கல்மழையை பெய்யப் பண்ணுகிறார். அவர் அனுப்பும் குளிரைத் தாங்கிக்கொள்ள ஒருவனாலும் ஆகாது. அப்போது, தேவன் மற்றொரு கட்டளையைத் தருகிறார், உடனே வெப்பமான காற்று மீண்டும் வீசுகிறது. பனி உருகுகிறது, தண்ணீர் பாய்ந்தோடத் தொடங்குகிறது. தேவன் யாக்கோபிற்குத் தமது கட்டளைகளைக் கொடுத்தார். தேவன் இஸ்ரவேலுக்கு அவரது சட்டங்களைக் கொடுத்தார். தேவன் வேறெந்த தேசத்திற்கும் இதைச் செய்யவில்லை. தேவன் வேறெந்த ஜனங்களுக்கும் தனது சட்டங்களைப் போதிக்கவில்லை.
சங்கீதம் 147:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் சொல்லுகிறது. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படிச் செய்ய, தண்ணீர்கள் ஓடும். யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.