சங்கீதம் 147:1-11
சங்கீதம் 147:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவைத் துதியுங்கள். நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது, அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்; அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார். அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி, அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்; அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை. யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்; ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார். யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்; யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள். அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்; பூமிக்கு மழையைக் கொடுத்து, மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார். மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் உணவு கொடுக்கிறார். குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை, படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை; யெகோவா தமக்குப் பயந்து, தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில் வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.
சங்கீதம் 147:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
சங்கீதம் 147:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். எங்கள் தேவனுக்கு துதிகளைப் பாடுங்கள். அவரைத் துதிப்பது நல்லதும் களிப்புமானது. கர்த்தர் எருசலேமைக் கட்டினார். சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலரை தேவன் மீண்டும் அழைத்து வந்தார். தேவன் அவர்களின் உடைந்த இருதயங்களைக் குணமாக்கி, அவர்கள் காயங்களைக் கட்டுகிறார். தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார். நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர். அவர் மிகவும் வல்லமையுள்ளவர். அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. கர்த்தர் எளியோரைத் தாங்கி உதவுகிறார். ஆனால் அவர் தீயோரை அவமானப்படுத்துகிறார். கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். கின்னரங்களால் நமது தேவனைத் துதியுங்கள். தேவன் வானத்தை மேகங்களால் நிரப்புகிறார். தேவன் பூமிக்காக மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் மலைகளின் மேல் புல் வளரும்படி செய்கிறார். தேவன் மிருகங்களுக்கு உணவளிக்கிறார். தேவன் பறவைக் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறார். போர்க் குதிரைகளும் வல்லமையுள்ள வீரர்களும் அவரை மகிழ்ச்சிப்படுத்தமாட்டார்கள். கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்கள் அவரை மகிழ்ச்சியாக்குகிறார்கள். அவரது உண்மை அன்பை நம்புகிற ஜனங்களைக் கண்டு அவர் சந்தோஷமடைகிறார்.
சங்கீதம் 147:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.