சங்கீதம் 146:1-10

சங்கீதம் 146:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன். உன் நம்பிக்கையை இளவரசர்களிலும், உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே. அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்; அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும். யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர், தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவரே வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்; யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார். யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார், யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார், யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார், யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார். யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார், அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார், ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார். யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்; சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.

சங்கீதம் 146:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி. நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.

சங்கீதம் 146:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரை துதி! என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன். உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது. ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும். ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள். கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார். ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார். குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார். தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார். நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார். விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!

சங்கீதம் 146:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம்பண்ணுகிறார். அல்லேலூயா.