சங்கீதம் 145:1-21

சங்கீதம் 145:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் அரசராகிய இறைவனே, நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்; நான் என்றென்றும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். நாள்தோறும் நான் உம்மைத் துதித்து, உம்முடைய பெயரை என்றென்றைக்கும் பாராட்டுவேன். யெகோவா பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாய் இருக்கிறார்; அவருடைய மகத்துவத்தை யாராலும் அளவிடமுடியாது. உம்முடைய செயல்களை ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும்; அவர்கள் உம்முடைய வல்லமையான செயல்களைச் சொல்வார்கள். நான் உம்முடைய மகத்துவத்தின் மாட்சிமையான சிறப்பையும், உமது அதிசயமான செயல்களையும் பற்றித் தியானிப்பேன். அவர்கள் உமது பிரமிக்கத்தக்க செயல்களின் வல்லமையைச் சொல்வார்கள்; நான் உம்முடைய மகத்துவமான கிரியைகளைப் பிரசித்தப்படுத்துவேன். அவர்கள் உமது நற்குணத்தின் மகத்துவத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியைக் குறித்துச் சந்தோஷமாய்ப் பாடுவார்கள். யெகோவா கிருபையும் கருணையும் உள்ளவர்; அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார். யெகோவா எல்லோருக்கும் நல்லவர்; தாம் படைத்த அனைத்தின்மேலும் இரக்கமுள்ளவர். யெகோவாவே, நீர் படைத்த எல்லாம் உம்மைத் துதிக்கும்; உமது உண்மையுள்ள மக்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மகிமையைச் சொல்லி, உம்முடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள். உம்முடைய அரசு ஒரு நித்தியமான அரசு; உம்முடைய ஆளுகை எல்லாத் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கிறது. யெகோவா தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும் நம்பத்தக்கவர்; தம்முடைய செயல்கள் அனைத்திலும் உண்மையுள்ளவர். யெகோவா விழுகிற யாவரையும் தாங்கி, தாழ்த்தப்பட்ட அனைவரையும் உயர்த்துகிறார். எல்லாருடைய கண்களும் உம்மை நோக்குகின்றன; ஏற்றவேளையில் நீர் அவர்களுக்கு உணவு கொடுக்கிறீர். நீர் உம்முடைய கையைத் திறந்து, எல்லா உயிரினங்களின் வாஞ்சைகளைத் திருப்தியாக்குகிறீர். யெகோவா தமது வழிகள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவராயும் தம்முடைய செயல்களிளெல்லாம் உண்மையுள்ளவராயும் இருக்கிறார். யெகோவா தம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும், உண்மையாகவே அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அருகே இருக்கிறார். அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார்; அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு அவர்களைக் காப்பாற்றுகிறார். யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களைப் பாதுகாக்கிறார்; ஆனால் கொடியவர்கள் அனைவரையும் தண்டிப்பார். என் வாய் யெகோவாவைத் துதிக்கும். எல்லா உயிரினங்களும் அவருடைய பரிசுத்த பெயரை என்றென்றும் துதிக்கட்டும்.

சங்கீதம் 145:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன். நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன். யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது. யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள். மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார். யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார். என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.

சங்கீதம் 145:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

என் தேவனும் ராஜாவுமாகிய உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன். நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன். நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன். கர்த்தர் பெரியவர். ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள். அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது. கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள். நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள். உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை. உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன். கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன். நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள். உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள். கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர். கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர். கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார். கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும். உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள். உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள். நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள். கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள். உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும். நீர் என்றென்றும் அரசாளுவீர். கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார். கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார். கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன. அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர். கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர். கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே. அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும். கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார். உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார். கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார். அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார். ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். நான் கர்த்தரைத் துதிப்பேன்! என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

சங்கீதம் 145:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன். கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன். ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது. கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங் கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ளயாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.