சங்கீதம் 141:1-10

சங்கீதம் 141:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத் தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும். என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும். அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும். துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

சங்கீதம் 141:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும். என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்; என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்; அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும். நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது; நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும். என் தலை அதை புறக்கணிக்காது; என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது. அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து கீழே தள்ளிவிடப்படுவார்கள்; அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள். “ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல், எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன” என்று அவர்கள் சொல்வார்கள். ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன; நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும். தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும், அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும். நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க, கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.

சங்கீதம் 141:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும். என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன். அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும். அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும். துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

சங்கீதம் 141:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன். நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும். விரைவாக எனக்கு உதவும்! கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும். எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும். கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும். நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும். தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும். தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும். தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும். நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும். அது அவன் நற்செயலாகும். உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும். அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும். நான் அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன். அவர்களின் ராஜாக்கள் தண்டிக்கப்படட்டும். அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள். ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள். அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும். என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன். நான் உம்மை நம்புகிறேன். தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும். தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள். அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும். அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும். நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.