சங்கீதம் 140:1-13

சங்கீதம் 140:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள். யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும். யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும். என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும். எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும். அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும். யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன். நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.

சங்கீதம் 140:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும். அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா) யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா) நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும். ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர். யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா) என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன். நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

சங்கீதம் 140:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை. அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும். கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள். அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள். என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள். அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள். கர்த்தாவே, நீரே என் தேவன். கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும். கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர். நீரே என் மீட்பர். போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர். கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும். அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும். கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும். அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும். நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும். என் பகைவர்களை நெருப்பில் வீசும். அவர்களைக் குழியில் தள்ளும், அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும். கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும். கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன். தேவன் திக்கற்றோருக்கு உதவுவார். கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

சங்கீதம் 140:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா) கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா) நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர். கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாகாதபடிச் செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா) என்னை வளைந்து கொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.