சங்கீதம் 139:7-12

சங்கீதம் 139:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்? நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். “நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும், இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.

சங்கீதம் 139:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.

சங்கீதம் 139:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர். கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர். அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர். கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன். ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.

சங்கீதம் 139:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்