சங்கீதம் 139:1-10

சங்கீதம் 139:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர், நீர் என்னை அறிந்துமிருக்கிறீர். நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர். நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்; என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர். என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே, யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர். நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது. உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்? நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.

சங்கீதம் 139:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என்னுடைய உட்காருதலையும் என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

சங்கீதம் 139:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர். நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர். கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர். கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர். கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர். நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது. நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர். கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர். அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

சங்கீதம் 139:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.