சங்கீதம் 138:1-8
சங்கீதம் 138:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; “தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், உமது பெயரைத் துதிப்பேன்; ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.
சங்கீதம் 138:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.
சங்கீதம் 138:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன். தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன். நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன். உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர். தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர். கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது பூமியின் எல்லா ராஜாக்களும் உம்மைத் துதிப்பார்கள். அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள். ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது. தேவன் மிக முக்கியமானவர். ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார். பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார். தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும். என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும். கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
சங்கீதம் 138:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர். கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.