சங்கீதம் 135:1-21

சங்கீதம் 135:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள். யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார். யெகோவா பெரியவர் என்றும், நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், மேலானவர் என்பதையும் நான் அறிவேன். வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார். அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; எமோரியரின் அரசன் சீகோனையும், பாசானின் அரசன் ஓகையும், கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார். பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும்.

சங்கீதம் 135:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள். யெகோவாவுடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை துதியுங்கள். யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது. யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து, அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார். அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள். எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.

சங்கீதம் 135:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்! கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! தேவனுடைய ஆலய முற்றத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது. கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேல் தேவனுக்கு உரியது. கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்! பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான. சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார். பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார். தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார். தேவன் காற்றையும் உண்டாக்குகிறார். எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும், எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார். எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார். பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார். தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார். எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார். பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார். கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார். தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார். அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள். கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார். ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார். பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே. அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே. சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை. சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை. சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை. சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை. அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள். ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள். இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்! கர்த்தர் சீயோனிலிருந்தும், அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

சங்கீதம் 135:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள். கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது. கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்ட சாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று; எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து, அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போல் இருக்கிறார்கள். இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.