சங்கீதம் 119:89-112
சங்கீதம் 119:89-112 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள் வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன். உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
சங்கீதம் 119:89-112 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது.
சங்கீதம் 119:89-112 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
சங்கீதம் 119:89-112 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும். உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும். நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர். கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது. உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது. உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன. கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும். ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன். தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள். ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று. உமது சட்டங்களைத் தவிர, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும். உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும். உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என் ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன். நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால், முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன். வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர். எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது. கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன். என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை. உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன். கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும். உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும். கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை. தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை. கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.