சங்கீதம் 119:81-128

சங்கீதம் 119:81-128 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உம்முடைய இரட்சிப்பின் மேலுள்ள வாஞ்சையினால் என் ஆத்துமா ஏங்குகிறது; நான் உமது வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன். உம்முடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன; “நீர் என்னை எப்பொழுது தேற்றுவீர்?” என்று கேட்க விரும்புகிறேன். நான் புகைக்குள்ளிருந்து சுருங்கிப்போகும் திராட்சைக் குடுவையைப்போல் இருந்தாலும், உமது விதிமுறைகளை மறவாமல் இருக்கிறேன். உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்? அகங்காரம் கொண்டவர்கள் நான் விழுவதற்குக் குழி தோண்டுகிறார்கள்; அது உமது சட்டத்திற்கு முரணானது. உம்முடைய கட்டளைகளெல்லாம் நம்பத்தகுந்தவை; காரணமின்றி மனிதர் என்னைத் துன்பப்படுத்துவதால், எனக்கு உதவிசெய்யும். அவர்கள் என்னைப் பூமியிலிருந்து ஏறக்குறைய அழித்துவிட்டார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைக் கைவிடவில்லை. உம்முடைய உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும், அதினால் நான் உமது வாயின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவேன். யெகோவாவே, உம்முடைய வார்த்தை நித்தியமானது; அது வானங்களில் உறுதியாய் நிற்கின்றது. உம்முடைய சத்தியம் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்கிறது; நீர் பூமியை நிலைநிறுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய சட்டங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன; ஏனெனில் எல்லாம் உமக்குப் பணி செய்கின்றன. உம்முடைய சட்டம் என் மனமகிழ்ச்சியாய் இராதிருந்தால், நான் என் துன்பத்திலே அழிந்து போயிருப்பேன். நான் உமது ஒழுங்குவிதிகளை ஒருபோதும் மறவேன்; ஏனெனில் அவைகளால் நீர் என் வாழ்வைக் காத்துக்கொண்டீர். நான் உம்முடையவனாய் இருப்பதால் என்னைக் காப்பாற்றும்; நான் உம்முடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தேன். கொடியவர்கள் என்னை அழிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உமது நியமங்களை ஆழ்ந்து சிந்திப்பேன். பரிபூரணத்திற்கும் ஓர் எல்லையை நான் காண்கிறேன்; ஆனால் உமது கட்டளைகளோ எல்லையற்றவை. ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்! நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன். உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால், அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது. நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால், முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன். உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி நான் என் நடைகளை, எல்லாத் தீய வழிகளிலுமிருந்து விலக்கிக் காத்துக்கொண்டேன்; நான் உமது சட்டங்களைவிட்டு விலகிப் போகாமலிருக்கிறேன்; ஏனெனில் நீர் தாமே அவைகளை எனக்கு போதித்திருக்கிறீர். உமது வார்த்தைகள் எனக்கு எவ்வளவு இனிமையானவை! என் வாய்க்கு அவை தேனைவிட இனிமையானவை. உமது ஒழுங்குவிதிகளால் நான் விளங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்; ஆகவே எல்லாத் தவறான வழிகளையும் நான் வெறுக்கிறேன். உமது வார்த்தை எனது கால்களுக்கு விளக்காகவும் என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. உமது நீதியான சட்டங்களை நான் பின்பற்றுவேன் என்று நான் ஒரு சத்தியப் பிரமாணம் எடுத்தேன்; அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறேன். நான் அதிகமாய் துன்பமடைந்திருக்கிறேன்; யெகோவாவே, உமது வார்த்தையின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். யெகோவாவே, நான் மனப்பூர்வமாக செலுத்தும் என் வாயின் துதிகளை ஏற்றுக்கொள்ளும்; உமது நீதிநெறிகளை எனக்குப் போதியும். என் உயிர் எப்போதும் ஆபத்தில் இருந்தாலும், உமது சட்டத்தையோ மறக்கமாட்டேன். கொடியவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்; ஆனாலும் நான் உமது ஒழுங்குவிதிகளைவிட்டு விலகவில்லை. உமது நியமங்களே என்றென்றுமாய் எனது பரம்பரைச் சொத்து; அவைகள் என் இருதயத்தின் மகிழ்ச்சி. உமது விதிமுறைகளை கடைசிவரைக்கும் கைக்கொள்ள என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது. இருமனம் கொண்டவர்களை நான் வெறுக்கிறேன். நானோ உமது சட்டத்தை நேசிக்கிறேன். நீரே என் புகலிடமும் என் கேடயமுமாய் இருக்கிறீர்; உமது வார்த்தையில் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். அக்கிரம செய்கைக்காரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் என் இறைவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்! உமது வாக்குத்தத்தத்தின்படி என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் வாழ்வடைவேன்; என் நம்பிக்கை வீண்போக விடாதேயும். என்னைத் தாங்கிக்கொள்ளும். அப்பொழுது நான் விடுவிக்கப்படுவேன்; நான் எப்பொழுதும் உமது விதிமுறைகளை மதிப்பேன். உமது விதிமுறைகளிலிருந்து விலகிப்போகிற எல்லோரையும் நீர் புறக்கணிக்கிறீர். அவர்களுடைய வஞ்சனை வெறுமையானது. பூமியிலுள்ள கொடியவர்கள் அனைவரையும் நீர் களிம்பைப்போல் நீக்கிவிடுகிறீர்; ஆகையால் நான் உமது நியமங்களை நேசிக்கிறேன். உம் மீதுள்ள பயபக்தியால் எனது தசை நடுங்குகிறது; நான் உமது சட்டங்களுக்குப் பயப்படுகிறேன். நான் நியாயமும், நீதியுமானதைச் செய்திருக்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களிடத்தில் என்னை விட்டுவிடாதேயும். உமது பணியாளனின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும்; அகந்தையுள்ளவர்கள் என்னை ஒடுக்குவதற்கு இடமளியாதேயும். உமது இரட்சிப்பைக் காண்பதற்கும், உமது நீதியான வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கும் காத்திருந்து, என் கண்கள் மங்கிப்போகின்றன. உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும். நான் உமது பணியாளன்; உமது நியமங்களை விளங்கிக்கொள்ளும்படி எனக்கு பகுத்தறிவைத் தாரும். யெகோவாவே, நீர் செயலாற்றும் வேளை வந்தது; உமது சட்டம் மீறப்பட்டுவிட்டது. உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும், உமது ஒழுங்குவிதிகளெல்லாம் நியாயமானவை என்று நான் எண்ணுவதாலும், நான் தவறான வழிகளையெல்லாம் வெறுக்கிறேன்.

சங்கீதம் 119:81-128 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும். அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன். உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன். துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன். உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும். என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது. பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும். உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

சங்கீதம் 119:81-128 பரிசுத்த பைபிள் (TAERV)

நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன். நீர் உறுதியளித்தவற்றிற்காக நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்களோ தளர்ந்து போகின்றன. கர்த்தாவே, நீர் எப்போது எனக்கு ஆறுதலளிப்பீர்? குப்பை மேட்டில் கிடக்கும் காய்ந்த தோல்பைப்போல ஆனாலும், நான் உமது சட்டங்களை மறக்கமாட்டேன். எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்? கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்? சில பெருமைக்காரர்கள் தங்கள் பொய்களால் என்னைக் குத்தினார்கள். அது உமது போதனைகளுக்கு எதிரானது. கர்த்தாவே, ஜனங்கள் உமது கட்டளைகளையெல்லாம் நம்பமுடியும். அவர்கள் என்னைத் தவறாகத் துன்புறுத்துகிறார்கள், எனக்கு உதவும்! அந்த ஜனங்கள் ஏறக்குறைய என்னை அழித்துவிட்டார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை. கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும். நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன். கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும். உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும். நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர். கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது. உமது சட்டங்களாலும், அவற்றிற்கு ஒரு அடிமையைப்போன்று பூமி கீழ்ப்படிவதாலும் அது இன்றுவரை நிலைத்திருக்கிறது. உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளை என்றைக்கும் மறக்கமாட்டேன். ஏனெனில் அவை என்னை வாழவைக்கின்றன. கர்த்தாவே, நான் உம்முடையவன், எனவே என்னைக் காப்பாற்றும். ஏனெனில் நான் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு மிகவும் முயல்கிறேன். தீயோர் என்னை அழிக்க முயன்றார்கள். ஆனால் உமது உடன்படிக்கை என்னை ஞானமுள்ளவனாக்கிற்று. உமது சட்டங்களைத் தவிர, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன். கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும். உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும். உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என் ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன். நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால், முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன். வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர். எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது. கர்த்தாவே, நீரே என் ஆசிரியர். ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன். என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை. உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின. எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன். கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும். உமது சட்டங்கள் நல்லவை. நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன். நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன். தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும். கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது. ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை. தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை. கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன். அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன். கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன். ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன். கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும். நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன். நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும். கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன். நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன். கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர். ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள். கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன். கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன். நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன். நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன். கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும். என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும். நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும். கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும், என் கண்கள் தளர்ந்து போய்விட்டன. நான் உமது ஊழியன். உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். உமது சட்டங்களை எனக்குப் போதியும். நான் உமது ஊழியன். உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும். கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம். ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள். கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும் நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன். தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.

சங்கீதம் 119:81-128 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டு விடவில்லை. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன். கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள் வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன். உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன். உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.