சங்கீதம் 119:159-168

சங்கீதம் 119:159-168 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் ச­மூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன். பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.

சங்கீதம் 119:159-168 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும். உமது வார்தைகள் எல்லாம் உண்மையானவை; நீதியான உமது சட்டங்கள் எல்லாம் நித்தியமானவை. ஆட்சியாளர்கள் காரணமில்லாமல் என்னை உபத்திரவப்படுத்துகிறார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வார்த்தைக்கு நடுங்குகிறது. பெரும் கொள்ளைப்பொருளைக் கண்டுபிடித்து மகிழ்வதுபோல், உமது வாக்குத்தத்தத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் பொய்யை வெறுத்து அருவருக்கிறேன்; ஆனால் உமது சட்டத்தையோ நான் நேசிக்கிறேன். நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை. யெகோவாவே, உமது இரட்சிப்புக்காக நான் காத்திருக்கிறேன்; உமது கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். நான் உமது நியமங்களுக்குக் கீழ்ப்படிகிறேன்; ஏனெனில் நான் அவற்றை அதிகமாய் நேசிக்கிறேன். நான் உமது ஒழுங்குவிதிகளுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிகிறேன்; எனது எல்லா செயல்களும் உமக்குத் தெரிந்திருக்கின்றன.

சங்கீதம் 119:159-168 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன். பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை. யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.

சங்கீதம் 119:159-168 பரிசுத்த பைபிள் (TAERV)

பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும். கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை. உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும். எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள். ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன். கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும் சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன. நான் பொய்களை வெறுக்கிறேன்! நான் அவற்றை அருவருக்கிறேன்! ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். உமது நல்ல சட்டங்களுக்காக ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள். அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது. கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன். நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன். கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன். நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன். கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.