சங்கீதம் 112:1-10

சங்கீதம் 112:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது. நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள். தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும். நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள். துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது. அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான். அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான். கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.

சங்கீதம் 112:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான். அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி, தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.

சங்கீதம் 112:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரை துதியுங்கள்! கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான். அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும். தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர். தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது. அவன் விழமாட்டான், ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான். அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான். அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான். அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும். தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.

சங்கீதம் 112:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன். இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.