சங்கீதம் 111:1-10

சங்கீதம் 111:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அல்லேலூயா, நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும் நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன். யெகோவாவின் செயல்கள் மகத்தானவை; அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன. அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை; அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது. அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார். அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்; அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார். அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து, தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார். அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை; அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை. அவை என்றென்றும் உறுதியானவை; உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை. அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.

சங்கீதம் 111:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 111:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரைத் துதியங்கள்! நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில் நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன். கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள். உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார். அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது. கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார். தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார். அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார். அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும். தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும். அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை. தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும். அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும். தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார். தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும். தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள். என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

சங்கீதம் 111:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும், சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன். கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர். தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள். அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.