சங்கீதம் 107:23-36
சங்கீதம் 107:23-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். அவர் கட்டளையிடப் பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்து போகிறது. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும், குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார். அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி
சங்கீதம் 107:23-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள். அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள். ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; அது அலைகளை உயர எழச்செய்தது. அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது. அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று. அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; கடலின் அலைகள் அடங்கிப்போயின. அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும். யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார், செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார். அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார். பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள்.
சங்கீதம் 107:23-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி
சங்கீதம் 107:23-36 பரிசுத்த பைபிள் (TAERV)
சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள். பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள். கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள். கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள். தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின. அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று. அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள். மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று. அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார். தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார். கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள். அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார். அவரது அன்பிற்காகவும், அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள். பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள். முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள். தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார். நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார். தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார். அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர். தேவன் பாலைவனத்தை மாற்றினார். அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று. தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார். தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார். அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.