சங்கீதம் 104:10-18
சங்கீதம் 104:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது. அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன. ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன. அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது. அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்: மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார். யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார். அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன. உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
சங்கீதம் 104:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, கிளைகள் மேலிருந்து பாடும். தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார். யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும். அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு. உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
சங்கீதம் 104:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர். பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது. நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன. வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும். மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன. மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார். நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம். அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன. நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும் நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும், நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார். லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார். அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும். காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
சங்கீதம் 104:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும். தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாரு விருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.