சங்கீதம் 103:1-12
சங்கீதம் 103:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி. என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார். அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார். அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா நியாயத்தையும் நீதியையும் செய்கிறார். அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார், தமது செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படிச் செய்தார். யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல; தமது கோபத்தை என்றென்றும் வைத்திருக்கவுமாட்டார். நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை, நமது அநியாயங்களுக்குத் தக்கதாக நம்மைத் தண்டிப்பதும் இல்லை. ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயபக்தியாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய உடன்படிக்கையின் அன்பும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய மீறுதல்களை நம்மைவிட்டு விலக்கிவிட்டார்.
சங்கீதம் 103:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று. என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது. ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார். யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை. அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
சங்கீதம் 103:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள். என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே. நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார். தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார். கர்த்தர் நியாயமானவர். பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார். தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார். கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர். கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை. நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை. வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது. மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
சங்கீதம் 103:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது. ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும், நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங் கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.