நீதிமொழிகள் 9:13-18

நீதிமொழிகள் 9:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து, தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

நீதிமொழிகள் 9:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது; அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள். அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள், பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில் நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு, “அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள், “திருட்டுத்தண்ணீர் இனிமையானது; இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!” ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும், அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 9:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

நீதிமொழிகள் 9:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு முட்டாள் சத்தமாகப் பேசும் தீய பெண்ணைப் போன்றவன். அவளுக்கு அறிவில்லை. அவள் தன் வீட்டுக் கதவருகில் உட்கார்ந்திருப்பாள். நகரத்து மலை மீது இருக்கை போட்டு அமர்ந்திருப்பாள். அவ்வழியாக ஜனங்கள் போகும்போது அவள் அவர்களை அழைக்கிறாள். அவர்களுக்கு அவளைப்பற்றி எந்த ஆர்வமும் இல்லாவிட்டாலும் அவள், “கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்பாள். அவள் முட்டாள் ஜனங்களையும் அழைக்கிறாள். ஆனால் முட்டாள்தனமாகிய அந்தப் பெண், “நீங்கள் தண்ணீரைத் திருடினால் அது உங்கள் சொந்தத் தண்ணீரைவிடச் சுவையானதாக இருக்கும். நீங்கள் ரொட்டியைத் திருடினால், அது நீங்களாக சமைத்த ரொட்டியைவிடச் சுவையானதாக இருக்கும்” என்பாள். அவள் வீடு முழுவதும் கெட்ட ஆவிகளால் நிறைந்திருக்கும் என்று முட்டாள்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் அவர்களை மரணத்தின் ஆழமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வாள்.