நீதிமொழிகள் 9:1-6
நீதிமொழிகள் 9:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது. ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது. தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது, “அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது, “வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள். நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; மெய்யறிவின் வழியில் நடங்கள்.”
நீதிமொழிகள் 9:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
நீதிமொழிகள் 9:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
ஞானம் தனது வீட்டைக் கட்டி அதில் ஏழு தூண்களையும் அமைத்துக்கொண்டாள். ஞானம் இறைச்சியைச் சமைத்து, திராட்சை ரசத்தைத் தயாரித்து அவைகளை மேஜைமீது வைத்தாள். பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள். அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள். “வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள். உங்கள் பழைய முட்டாள்தனமான வழிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளுதலின் வழியைப் பின்பற்றுங்கள்” என்றாள்.
நீதிமொழிகள் 9:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி. தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.