நீதிமொழிகள் 9:1-12

நீதிமொழிகள் 9:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி, அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது. ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது; அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது. தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது, “அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!” பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது, “வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள். நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்; மெய்யறிவின் வழியில் நடங்கள்.” ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்; கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள். ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்; ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள். ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்; நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல். ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும், உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும். நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்; நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய்.

நீதிமொழிகள் 9:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான். யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

நீதிமொழிகள் 9:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

ஞானம் தனது வீட்டைக் கட்டி அதில் ஏழு தூண்களையும் அமைத்துக்கொண்டாள். ஞானம் இறைச்சியைச் சமைத்து, திராட்சை ரசத்தைத் தயாரித்து அவைகளை மேஜைமீது வைத்தாள். பிறகு தன் வேலைக்காரர்களை அனுப்பி நகரத்திலிருந்து ஜனங்களை மலைக்கு வந்து தன்னோடு உணவருந்தும்படி அழைத்தாள். அவள், “வாருங்கள், கற்க அவசியமுள்ளவர்களே வாருங்கள்” என்று அழைத்தாள். அறிவில்லாதவர்களையும் அவள் வரவழைத்தாள். “வாருங்கள், ஞானமாகிய உணவை உண்ணுங்கள். நான் தயாரித்த திராட்சைரசத்தைப் பருகுங்கள். உங்கள் பழைய முட்டாள்தனமான வழிகளை விட்டுவிடுங்கள். உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது. புரிந்துகொள்ளுதலின் வழியைப் பின்பற்றுங்கள்” என்றாள். பெருமை கொண்டவனிடம் சென்று அவன் வழிகள் தவறானவை என்று நீ சொல்ல முயற்சித்தால், அவன் உன்னிடமே குற்றம் கண்டுபிடித்து இழிவாகப் பேசுவான். அவன் தேவனுடைய ஞானத்தையும் கேலிச் செய்வான். ஒரு கெட்டவனிடம் அவன் தவறானவன் என்று நீ சொன்னால் அவன் உன்னையும் கேலிச் செய்வான். எனவே ஒருவன் மற்றவர்களைவிட தான் மேலானவன் என எண்ணிக்கொண்டிருந்தால், அவன் வழிகள் தவறானவை என்று அவனிடம் சொல்லவேண்டாம். இதற்காக அவன் உன்னை வெறுப்பான். ஆனால் நீ ஒரு புத்திசாலிக்கு உதவி செய்தால் அவன் உன்னை மதித்துப் போற்றுவான். நீ அறிவாளிக்குப் போதித்தால் அவன் மேலும் ஞானத்தைப் பெறுகிறான். நீ நல்லவனுக்குப் போதித்தால் அவன் மேலும் கற்றுக்கொள்வான். கர்த்தரை மதிப்பதுதான் ஞானம் பெறுவதற்கான முதல் படியாகும். கர்த்தரைப்பற்றிய அறிவைப் பெறுவதுதான் அறிவைப் பெறுவதற்கான முதல் படியாகும். நீ ஞானம் உடையவனாக இருந்தால், உன் ஆயுள் காலம் நீண்டதாக இருக்கும். நீ ஞானம் உடையவனாக ஆனால் உனது சொந்த நன்மைக்கு நீ ஞானம் உடையவனாகிறாய். ஆனால் நீ வீண்பெருமை கொண்டவனாகி மற்றவர்களைக் கேலி செய்தால், உனது துன்பங்களுக்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய்.

நீதிமொழிகள் 9:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி. தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். பேதமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.