நீதிமொழிகள் 8:12-30
நீதிமொழிகள் 8:12-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது. தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு. என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள். என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள். என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன. என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது. நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன். என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன். “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்; நீண்ட காலத்திற்கு முன்பு நான் உருவாக்கப்பட்டேன், உலகம் உண்டாவதற்கு முன்பே, ஆரம்பத்திலிருந்தே நான் படைக்கப்பட்டேன். சமுத்திரங்கள் உண்டாவதற்கு முன்பே நான் பிறந்தேன், அப்பொழுது தண்ணீர் நிறைந்த ஊற்றுக்களும் இருக்கவில்லை. மலைகளும் குன்றுகளும் அவற்றுக்குரிய இடங்களில் அமையுமுன்பே நான் பிறந்திருந்தேன். அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன். அவர் வானங்களை அதற்குரிய இடத்தில் அமைத்தபோதும், ஆழத்தின் மேற்பரப்பில் அவர் அடிவானத்தை குறித்தபோதும் நான் அங்கிருந்தேன். அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன். கடலுக்கு எல்லையை அமைத்து, தண்ணீர் அவருடைய கட்டளையை மீறி வெளியேறாதபடி அவர் பூமிக்கு அதின் அஸ்திபாரத்தைக் குறியிட்டபோதும் நான் அங்கேயே இருந்தேன். அப்பொழுது நான் யெகோவாவின் அருகில் ஒரு திறமைவாய்ந்த சிற்பியாக இருந்தேன். நான் நாள்தோறும் அவருக்குப் பிரியமாயிருந்து, எப்பொழுதும் அவருக்கு முன்பாகக் களிகூர்ந்தேன்.
நீதிமொழிகள் 8:12-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
நீதிமொழிகள் 8:12-30 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும். ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான். ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன். மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன். நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன். ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன். நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன். ராஜாக்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள். பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான். என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன். என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள். ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன். நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை. ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன். என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன். ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன். நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன். உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன். நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன். ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள். நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன். கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். நான் உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன். கடல்களில் தண்ணீரின் அளவை கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கியபோது நான் அங்கிருந்தேன். நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன். கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார். நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன்.
நீதிமொழிகள் 8:12-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயப்பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.