நீதிமொழிகள் 8:1-22

நீதிமொழிகள் 8:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானம் அழைக்கிறதில்லையோ? புரிந்துகொள்ளுதல் குரல் எழுப்புகிறதில்லையோ? அது வழியிலுள்ள மேடுகளிலும் தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் நிற்கிறது. அது பட்டணத்திற்குப் போகும் வாசல்களின் அருகில், அதின் நுழைவாசலில் நின்று, சத்தமிட்டுக் கூப்பிடுகிறது: “மனிதர்களே, நான் உங்களைக் கூப்பிடுகிறேன்; மனுக்குலம் எல்லாம் கேட்கும்படி என் சத்தத்தை உயர்த்துகிறேன். அறிவில்லாதவர்களே, விவேகத்தை அடையுங்கள்; மூடர்களே, விவேகத்தின்மேல் மனதை வைத்துக்கொள்ளுங்கள். கேளுங்கள், சொல்லுவதற்கு நம்பகமான காரியங்கள் என்னிடம் இருக்கிறது; என் உதடுகள் நேர்மையான காரியங்களைப் பேசும். உண்மையானது எதுவோ, அதையே என் வாய் பேசுகிறது; கொடுமையை என் உதடுகள் வெறுக்கிறது. என் வாயின் வார்த்தைகள் எல்லாம் நீதியானவை; அவற்றில் கபடமோ, வஞ்சனையோ இல்லை. பகுத்தறிவு உள்ளவர்களுக்கு அவை தெளிவானவை; அறிவுடையோருக்கு அவை நேர்மையானவை. வெள்ளியைவிட என் அறிவுரைகளையும் தங்கத்தைவிட அறிவையும் தெரிந்தெடு. ஏனெனில் ஞானம் பவளத்தைவிட அதிக மதிப்புள்ளது; நீ விரும்பும் எதுவும் அதற்கு நிகரானது அல்ல. “ஞானமாகிய நான், விவேகத்துடன் ஒன்றாக குடியிருக்கிறேன்; எனக்கு அறிவும் பகுத்தறிவும் இருக்கிறது. தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயந்து நடப்பதாகும்; பெருமையையும் அகந்தையையும் தீய நடத்தையையும் வஞ்சகப்பேச்சையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் நிதானிக்கும் ஆற்றலும் என்னுடையவை; என்னிடம் மெய்யறிவும் வல்லமையும் உண்டு. என்னால் அரசர்கள் ஆட்சி செய்கிறார்கள், ஆளுநர்களும் நீதியான சட்டங்களை இயற்றுகிறார்கள். என்னால் இளவரசர்கள் ஆள்கிறார்கள், நீதிபதிகள் யாவரும் நீதித்தீர்ப்பை வழங்குகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்; என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டுகொள்வார்கள். என்னிடத்தில் செல்வமும் கனமும் நிலையான சொத்தும் நீதியும் இருக்கின்றன. என்னால் வரும் பலன் தங்கத்திலும் சிறந்தது; தரமான வெள்ளியிலும் மேன்மையானது. நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன். என்னை நேசிப்பவர்களுக்கு செல்வத்தை வழங்குகிறேன், அவர்களுடைய களஞ்சியத்தையும் நிரப்புகிறேன். “யெகோவா தம் பூர்வீக செயல்களுக்கு முன்பே, தமது வேலைப்பாடுகளில் முதன்மையாக என்னைப் படைத்திருந்தார்

நீதிமொழிகள் 8:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.

நீதிமொழிகள் 8:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

கவனியுங்கள்! ஞானமும், அறிவும் கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன. அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது. அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன. திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன. ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன். நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன். நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள். முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள். கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனது வார்த்தைகள் உண்மையானவை. நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன். நான் சொல்வதெல்லாம் சரியானவை. என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை. புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை. அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான். எனது ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது. ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது” என்று ஞானம் கூறுகிறது. நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும். ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீயவைகளை வெறுக்கிறான். ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன். மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன். நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன். ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன். நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன். ராஜாக்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள். ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள். பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான். என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன். என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள். ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன். நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை. ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன். என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன். ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன். நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன்.

நீதிமொழிகள் 8:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயப்பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார்.