நீதிமொழிகள் 6:4-11

நீதிமொழிகள் 6:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும், உன் கண் இமைகளுக்கு தூக்கத்தையும் வரவிடாதே. வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு. சோம்பேறியே, நீ எறும்பிடம் போய், அதின் வழிகளைக் கவனித்து ஞானியாகு! அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ, அதிகாரியோ இல்லை. அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது, அறுவடைக்காலத்தில் தன் உணவை அது சேகரிக்கிறது. சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்? கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால், வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்; பற்றாக்குறை ஆயுதம் தாங்கிய முரடனைப்போல உன்னைத் தாக்கும்.

நீதிமொழிகள் 6:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

நீதிமொழிகள் 6:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அதுவரை தூங்காதே, ஓய்வுக்கொள்ள எண்ணாதே. வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு. சோம்பேறியே! நீ எறும்பைப்போல இருக்க வேண்டும். எறும்பு என்ன செய்கிறது என்று பார். அதனிடமிருந்து கற்றுக்கொள். அந்த எறும்புக்கு ஒரு ராஜாவோ, தலைவனோ, எஜமானோ இல்லை. ஆனால் அது கோடைக்காலத்தில் தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்துக்கொள்ளும். தன் உணவை அது பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் போதுமான அளவுக்கு அதனிடத்தில் உணவு உள்ளது. சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்? அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான். ஆனால் அவன் மீண்டும், மீண்டும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் மேலும், மேலும் வறுமைக்குள்ளாவான். விரைவில் அவனிடம் ஒன்றுமேயில்லாமற்போகும். ஒரு திருடன் வந்து அனைத்தையும் அபகரித்துக்கொண்டு போனது போல இருக்கும்.

நீதிமொழிகள் 6:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.