நீதிமொழிகள் 6:24-29

நீதிமொழிகள் 6:24-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும், விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும். நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே. ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்; பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள். ஒருவன் தன் உடைகள் எரியாமல் தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ? அல்லது தனது பாதங்கள் எரியாதபடி, ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ? அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்; அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 6:24-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா? பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான்.

நீதிமொழிகள் 6:24-29 பரிசுத்த பைபிள் (TAERV)

பாவமுள்ள பெண்ணிடம் உன்னைப் போகவிடாமல் தடுக்கும். அவர்களது போதனைகள், தன் கணவனை விட்டு விலகி வந்த பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காப்பாற்றும். அப்பெண் அழகுள்ளவளாக இருக்கலாம். ஆனால், அந்த அழகு உன் உள்ளத்தை அழித்து உன்னைத் தூண்டாமல் பார்த்துக்கொள். அவளது கண்கள் உன்னைக் கவர்ந்துக்கொள்ளவிடாதே. வேசியானவள் ஒரு ரொட்டித்துண்டுக்குரிய விலையையே பெறுவாள். ஆனால் அடுத்தவன் மனைவியோ உனது வாழ்க்கையையே இழக்கச் செய்வாள். ஒருவன் தன் மடியிலே நெருப்பை வைத்திருந்தால் அது அவனது ஆடைகளை எரித்துவிடும். ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவனது பாதங்கள் எரிந்து கருகும். இது போலவே இன்னொருவனது மனைவியோடு படுப்பவன் துன்பப்படுவான்.

நீதிமொழிகள் 6:24-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும். உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்