நீதிமொழிகள் 5:15-23
நீதிமொழிகள் 5:15-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு. உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ? அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது. உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக. அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக. என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்? மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார். கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன. அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.
நீதிமொழிகள் 5:15-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக. உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு. என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
நீதிமொழிகள் 5:15-23 பரிசுத்த பைபிள் (TAERV)
உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே. உனது பிள்ளைகள் உனக்கு மட்டுமே உரியவர்களாக இருக்க வேண்டும். உன் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களோடு உன் பிள்ளைகளைப் பகிர்ந்துகொள்ளாதே. எனவே உன் சொந்த மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. நீ இளமையாக இருக்கும்போது மணந்துகொண்ட மனைவியோடு மகிழ்ச்சியாக இரு. அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும். ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை. நீ செய்கிற அனைத்தையும் கர்த்தர் தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீ எங்கே போகிறாய் என்று கவனிக்கிறார். கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும். அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.
நீதிமொழிகள் 5:15-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு, உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.