நீதிமொழிகள் 4:10-19

நீதிமொழிகள் 4:10-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும். நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன். நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய். அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு. கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே. அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல். ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள். அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள். நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.

நீதிமொழிகள் 4:10-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; தீயோர்களுடைய வழியில் நடக்காதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ. தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.

நீதிமொழிகள் 4:10-19 பரிசுத்த பைபிள் (TAERV)

மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும். தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது. நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.

நீதிமொழிகள் 4:10-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ. பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும். அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.