நீதிமொழிகள் 30:1-20

நீதிமொழிகள் 30:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாக்கேயின் மகன் ஆகூரினால் கூறப்பட்ட இறைவாக்கு. அவன் ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்னது: “இறைவனே, நான் சோர்ந்துவிட்டேன், ஆனால் நான் வெற்றிபெற முடியும். நான் ஒரு முட்டாள், ஒரு மனிதன் அல்ல; ஒரு மனிதனுக்குரிய அறிவாற்றல் எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவில்லை, பரிசுத்தரைப் பற்றிய அறிவும் எனக்கில்லை. மேலே வானத்திற்கு போய் கீழே இறங்கி வந்தவர் யார்? தனது கைகளின் பிடிக்குள்ளே காற்றைச் சேர்த்துக்கொண்டவர் யார்? வெள்ளத்தைத் தனது உடையில் சுற்றிக் கட்டியவர் யார்? பூமியின் எல்லைகளை நிலைநாட்டியவர் யார்? அவருடைய பெயர் என்ன, அவருடைய மகனின் பெயர் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். “இறைவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குறைபாடற்றது; அவரிடத்தில் அடைக்கலம் கொள்பவர்களுக்கு அவர் கேடயமானவர். அவருடைய வார்த்தைகளோடு நீ ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கண்டித்து, பொய்யன் என நிரூபிப்பார். “யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும். மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம், ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும். இல்லாவிட்டால், நான் அளவுக்கதிகமாய் வைத்துக்கொண்டு ‘யெகோவா யார்?’ என்று கேட்டு ஒருவேளை உம்மை மறுதலிக்கக் கூடும்; அல்லது நான் ஏழையாகி, திருடி என் இறைவனுடைய பெயரை அவமானப்படுத்தக்கூடும். “வேலைக்காரர்களைப் பற்றி அவர்களுடைய எஜமானிடம் இழிவாகப் பேசாதே; அப்படிப் பேசினால் அவர்கள் உன்னை சபிப்பார்கள், நீ குற்றவாளியாவாய். “தங்கள் தந்தையர்களை சபிக்கிறவர்களும், தங்கள் தாய்மாரை ஆசீர்வதியாமல் இருக்கிறவர்களும் உண்டு; தங்கள் அழுக்கிலிருந்து கழுவப்படாமலிருந்தும், தங்கள் கண்களுக்குத் தூய்மையாகக் காணப்படுகிறவர்களும் உண்டு; எப்பொழுதும் கண்களில் பெருமையும் ஆணவப் பார்வையையும் உடையவர்களும் உண்டு; கூர்மையான வாள் போன்ற பற்களையும் தீட்டிய கத்திகள் போன்ற கீழ்வாய்ப் பற்களையும் உடையவர்களும் உண்டு; அவர்கள் பூமியிலிருந்து ஏழைகளையும், மனுக்குலத்திலிருந்து எளியவர்களையும் தின்றுவிடுவார்கள். “இரத்தம் குடிக்கும் அட்டைக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள், ‘தா! தா!’ என அழுகின்றனர். “ஒருபோதும் திருப்தியடையாத மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, ‘போதும்!’ என்று ஒருபோதும் சொல்லாத நான்காவது காரியமும் உண்டு: பாதாளம், மலட்டுக் கருப்பை, தண்ணீரால் திருப்தியடையாத நிலம், ஒருபோதும், ‘போதும்!’ என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே. “தன் தந்தையை ஏளனம் செய்து, தாய்க்குக் கீழ்ப்படிவதைக் கேலி செய்கிறவனுடைய கண்களை பள்ளத்தாக்கிலுள்ள அண்டங்காக்கைகள் கொத்திப் பிடுங்கும், கழுகுகள் அவற்றைத் தின்னும். “எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் மூன்று காரியங்கள் உண்டு, இல்லை, நான்காவதையும் என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை: ஆகாயத்திலே பறக்கும் கழுகின் வழியும், பாறையின்மேல் ஊரும் பாம்பின் வழியும், நடுக்கடலிலே கப்பலின் வழியும், இளம்பெண்ணின் அன்பை தேடிய ஒரு மனிதரின் வழியுமே அவை. “ஒரு விபசாரியின் வழியும் இவ்விதமானதே: அவள் சாப்பிட்டுவிட்டு தன் வாயைத் துடைத்துக்கொண்டு, ‘நான் பிழையேதும் செய்யவில்லை’ என்கிறாள்.

நீதிமொழிகள் 30:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ? தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

நீதிமொழிகள் 30:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை அனைத்தும் யாக்கோபின் குமாரனான ஆகூரின் ஞானமொழிகள். இது ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் அளித்த செய்தி: பூமியில் நான்தான் மிகவும் மோசமானவன். நான் புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ளவில்லை. ஞானியாக இருக்க நான் கற்றுக்கொள்ளவில்லை. தேவனைப்பற்றியும் எதுவும் அறிந்துகொள்ளவில்லை. பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி எவரும் எப்போதும் கற்றுக்கொண்டதில்லை. எவரும் காற்றைக் கையால் பிடித்ததில்லை. எவரும் தண்ணீரை துணியில் கட்டியதில்லை. எவருமே உண்மையில் பூமியின் எல்லையை அறிந்ததேயில்லை. இவற்றை எவராவது செய்யமுடியுமா? யார் அவர்? எங்கே அவரது குடும்பம் இருக்கிறது? தேவன் சொல்லுகிற அனைத்தும் பூரணமானவை. தேவன் அவரிடம் செல்லுகிறவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கிறார். எனவே தேவன் சொன்னவற்றை மாற்றுவதற்கு முயற்சி செய்யாதே. நீ அவ்வாறு செய்தால், அவர் உன்னைத் தண்டிப்பார். நீ பொய் சொல்கிறாய் என்பதையும் நிரூபிப்பார். கர்த்தாவே, நான் மரித்துப்போவதற்கு முன்பு எனக்காக நீர் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். நான் பொய் சொல்லாமல் இருக்க உதவிசெய்யும். மிக ஏழையாகவோ அல்லது மிகச் செல்வந்தனாகவோ என்னை ஆக்கவேண்டாம். அன்றாடம் எது தேவையோ அதை மட்டும் எனக்குத் தாரும். ஒருவேளை, என்னிடம் தேவைக்கு அதிகமான பொருட்கள் இருந்தால், நீர் எனக்குத் தேவையில்லை என்று எண்ணத் தொடங்குவேன். ஒருவேளை நான் ஏழையாக இருந்தாலோ திருடலாம். இதனால் நான் தேவனுடைய நாமத்திற்கு அவமானத்தைத் தேடித்தருவேன். எஜமானனிடம் அவனது வேலைக்காரனைப்பற்றிக் குற்றம் சொல்லாதே. நீ அவ்வாறு செய்தால், எஜமான் உன்னை நம்பமாட்டான். உன்னைக் குற்றம் உடையவனாக நினைப்பான். சிலர் தங்கள் தந்தைகளுக்கு எதிராகப் பேசுவார்கள். அவர்கள் தம் தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள். சிலர் தம்மை நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மிக மோசமாக இருப்பார்கள். சிலர் தம்மை மிகவும் நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களை விடத் தம்மை மிக நல்லவர்களாக எண்ணிக்கொள்வார்கள். சிலரது பற்கள் வாள்களைப்போன்று உள்ளன. அவர்களது தாடைகள் கத்திகளைப்போன்றுள்ளன. அவர்கள் ஏழை ஜனங்களிடமிருந்து எவ்வளவு எடுத்துக்கொள்ளமுடியுமோ அவ்வளவு எடுத்துக்கொள்வார்கள். சிலர் தம்மால் பெற முடிந்ததையெல்லாம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் சொல்வதெல்லாம், “எனக்குத் தா, எனக்குத் தா, எனக்குத் தா” என்பதே. திருப்தி அடையாதவை மூன்று உண்டு. உண்மையில் போதும் என்று சொல்லாதவை நான்கு உண்டு. மரணத்திற்குரிய இடம், மலட்டுப் பெண், மழை தேவைப்படுகிற வறண்ட நிலம், அணைக்க முடியாத நெருப்பு ஆகியவையே அவை. தன் தந்தையைக் கேலிச்செய்கிறவனும் தாயின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனும் தண்டிக்கப்படுவான். அத்தண்டனை அவனது கண்களைக் காகங்களும், கழுகின் குஞ்சுகளும் தின்னும்படியான பயங்கரமுடையது. என்னால் புரிந்துகொள்ளமுடியாத காரியங்கள் மூன்று உண்டு. உண்மையில் புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் நான்கு உண்டு. வானத்தில் பறக்கும் கழுகு, பாறைமேல் ஊர்ந்து செல்லும் பாம்பு, கடலில் அசையும் கப்பல், ஒரு பெண்ணின் மேல் அன்புகொண்டிருக்கும் ஆண் ஆகிய நான்கையும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. தன் கணவனுக்கு உண்மையில்லாத பெண், தான் எதுவும் தவறு செய்யாதவளைப்போன்று நடிக்கிறாள். அவள் சாப்பிடுகிறாள், குளிக்கிறாள், தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறாள்.

நீதிமொழிகள் 30:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள். தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு. தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு. அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும். எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே. அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.