நீதிமொழிகள் 3:5-18

நீதிமொழிகள் 3:5-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது. அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல. அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன. அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை. அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

நீதிமொழிகள் 3:5-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார். ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

நீதிமொழிகள் 3:5-18 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும். என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் குமாரனைத் தண்டிக்கிறார். ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது. ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது. ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும். ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 3:5-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

நீதிமொழிகள் 3:5-18

நீதிமொழிகள் 3:5-18 TAOVBSIநீதிமொழிகள் 3:5-18 TAOVBSIநீதிமொழிகள் 3:5-18 TAOVBSIநீதிமொழிகள் 3:5-18 TAOVBSIநீதிமொழிகள் 3:5-18 TAOVBSI