நீதிமொழிகள் 3:27-35
நீதிமொழிகள் 3:27-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே. உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே. உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே. ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே. வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே. ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார். கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும். பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார். ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள்.
நீதிமொழிகள் 3:27-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, காரணமின்றி அவனோடு வழக்காடாதே. கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
நீதிமொழிகள் 3:27-35 பரிசுத்த பைபிள் (TAERV)
உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே. உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள். சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே. சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார். தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார். ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார். ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக்கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக்கொண்டுவரும்.
நீதிமொழிகள் 3:27-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.