நீதிமொழிகள் 3:1-12

நீதிமொழிகள் 3:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள். அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும். அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள். அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய். உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே. நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார். உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு. அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு. அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும். என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே. ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.

நீதிமொழிகள் 3:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். உன்னுடைய பொருளாலும், உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.

நீதிமொழிகள் 3:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள். நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும். அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள். தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய். கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது. உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும். என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் குமாரனைத் தண்டிக்கிறார்.

நீதிமொழிகள் 3:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.