நீதிமொழிகள் 28:1-28
நீதிமொழிகள் 28:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான். வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப் பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள். துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள். இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி. வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான். அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான். பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம். உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான். வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான். தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன். பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
நீதிமொழிகள் 28:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கொடியவர்கள் தங்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் ஓடுகிறார்கள்; ஆனால் நீதிமான்கள் சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். நாட்டு மக்கள் கிளர்ச்சி செய்யும்போது, ஆட்சியாளர்கள் அநேகர் இருப்பார்கள்; ஆனால் விவேகமும் அறிவும் உள்ள ஆட்சியாளர் ஒழுங்கை நிலைநிறுத்துகிறார். ஏழைகளை ஒடுக்குகிற ஆளுநர், விளைச்சல் அனைத்தையும் அழிக்கும் பெருமழையைப் போலிருக்கிறான். சட்டங்களை புறக்கணிப்பவர்கள், கொடியவர்களைப் புகழ்கிறார்கள்; ஆனால் அதைக் கைக்கொள்கிறவர்கள் அவர்களை எதிர்க்கிறார்கள். தீயவர்கள் நீதியை விளங்கிக்கொள்ளமாட்டார்கள்; ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்கள் அதை முற்றுமாய் விளங்கிக்கொள்கிறார்கள். நேர்மையற்ற வழியில் நடக்கும் பணக்காரர்களைவிட, குற்றமற்ற வழியில் நடக்கும் ஏழைகளே சிறந்தவர்கள். விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான். வட்டியினாலும் அநியாய இலாபத்தினாலும் தன் செல்வத்தைப் பெருக்குகிறவர்கள், ஏழைகளுக்கு இரங்கும் மற்றவர்களுக்காக அதைச் சேர்க்கிறார்கள். சட்டத்திற்கு செவிசாய்க்காதவரின் ஜெபமும் இறைவனுக்கு அருவருப்பாயிருக்கும். நீதிமான்களைத் தீயவழியில் நடத்துகிறவர்கள், தாங்கள் வைத்த கண்ணிக்குள் தாங்களே அகப்படுவார்கள்; ஆனால் குற்றமற்றவர்கள் நன்மையைச் சுதந்தரிப்பார்கள். பணக்காரர்கள் தங்கள் பார்வைக்கு தாங்களே ஞானமுள்ளவர்களாய் காணப்படலாம்; ஆனால் மெய்யறிவுள்ள ஏழைகளோ, அவர்கள் யார் என்பதை சரியாக அறிந்துகொள்கிறார்கள். நீதிமான்கள் வெற்றியடையும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது; ஆனால் கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். தங்கள் பாவங்களை மறைக்கிறவர்கள் செழிப்படைய மாட்டான், ஆனால் அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவர்கள் எவர்களோ, அவர்கள் இரக்கம் பெறுவார்கள். எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; ஆனால் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவர்களோ ஆபத்தில் விழுகிறார்கள். ஏழைகளை ஆட்சிசெய்யும் கொடியவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போலவும் பாயும் கரடியைப்போலவும் இருக்கிறான். ஏழைகளை ஒடுக்குகிற கொடுமையான ஆளுநருக்கு ஞானம் இல்லை, ஆனால் அநியாய வழியில் சம்பாதிக்கும் ஆதாயத்தை வெறுக்கிறவர்கள் நீடிய வாழ்வை அனுபவிப்பார்கள். கொலைகாரனின் துன்புறுத்தப்பட்ட குற்றமனசாட்சி, அவனை கல்லறைக்கு இழுக்கும்; யாரும் அவனை ஆதரிக்கவேண்டாம். குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுவார்கள், ஆனால் தவறான வழியில் நடப்பவர்கள் திடீரென விழுந்துபோவார்கள். தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும், ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை வீணடிப்பவர்களோ, அதிக வறுமையில் வாடுவார்கள். உண்மையுள்ள மனிதர் நிறைவாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஆனால் விரைவாகப் பணக்காரனாக வேண்டுமென்பவர்கள், தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல, ஆனாலும் சிலர் ஒரு சிறு அப்பத்துண்டிற்காகவும் அநியாயம் செய்வார்கள். பேராசைக்காரர்கள் பணக்காரனாவதற்கு ஆவலாயிருக்கிறார்கள், ஏழ்மை தங்களுக்கு வருமென்று அறியாதிருக்கிறார்கள். தன் நாவினால் முகஸ்துதி செய்பவரைவிட, மற்றவரைக் கண்டிக்கிறவர்கள் முடிவில் அதிக தயவைப் பெறுவார்கள். தன் தகப்பனிடத்திலிருந்தோ தாயினிடத்திலிருந்தோ திருடிவிட்டு, “அதில் ஒரு பிழையும் இல்லை” எனச் சொல்பவர்கள் அழிவு உண்டாக்குகிறவர்களுக்குக் கூட்டாளியாயிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்படைவார்கள். தங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மூடராயிருக்கிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்களாய் நடக்கிறவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவில்லை, ஆனால் ஏழைகளின் தேவைகளை கவனிக்காதவர்கள் அநேக சாபங்களைப் பெறுவார்கள். கொடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, மக்கள் மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அழியும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.
நீதிமொழிகள் 28:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள். இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான். தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம். உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான். பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
நீதிமொழிகள் 28:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
தீயவர்கள் எல்லாவற்றுக்கும் அஞ்சுவார்கள். ஆனால் ஒரு நல்லவன் சிங்கத்தைப்போல் தைரியமானவன் ஆவான். ஒரு நாடு அடிபணிய மறுத்தால், அது குறுகிய காலமே ஆளும் தீய தலைவர்களைப் பெறும். ஆனால் ஒரு நாட்டிற்கு நல்லவனும் ஞானவானுமாகிய ஒருவன் தலைவனாக இருந்தால், அங்கே நீண்டக் காலம் நிலைத்த ஆட்சி நடைபெறும். ராஜா ஏழைகளுக்குத் துன்பம் செய்தால், பயிரை அழிக்கிற பெருமழை போன்று இருப்பான். நீ சட்டத்திற்கு அடிபணிய மறுத்தால் தீயவர்களைச் சார்ந்தவனாவாய். ஆனால் நீ சட்டத்திற்கு அடிபணிந்தால் அவர்களுக்கு எதிரானவனாவாய். தீயவர்கள் நேர்மையைப்பற்றிப் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் கர்த்தரை நேசிப்பவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள். ஒருவன் செல்வந்தனாகவும் தீயவனாகவும் இருப்பதைவிட நல்லவனாகவும் ஏழையாகவும் இருப்பது நல்லது. சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான். ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவன் தேவனுடைய போதனைகளைக் கேட்க மறுத்தால், தேவன் அவனது ஜெபங்களையும் கேட்க மறுத்துவிடுவார். ஒரு தீயவன், ஒரு நல்லவனைப் புண்படுத்தவே பல திட்டங்களைத் தீட்டமுடியும். ஆனால் அத்தீயவன் தனது சொந்த வலையிலேயே விழுவான். நல்லவனுக்கு நன்மையே ஏற்படும். செல்வந்தர்கள் எப்பொழுதும் தம்மைப் பெரிய ஞானிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழையும் பெரிய ஞானியுமானவன், உண்மையைக் கண்டுகொள்கிறான். நல்லவர்கள் தலைவர்களாக வந்தால் எல்லோரும் மகிழ்வார்கள். தீயவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், எல்லோரும் போய் ஒளிந்துகொள்வார்கள். ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள். ஒருவன் எப்பொழுதும் கர்த்தருக்கு மரியாதை செய்தால், அவன் ஆசீர்வதிக்கப்படுவான். ஆனால் ஒருவன் பிடிவாதமாக கர்த்தருக்கு மரியாதை தர மறுத்தால், பிறகு அவனுக்குத் துன்பங்களே ஏற்படும். பலவீனமானவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தீயவன் கோபங்கொண்ட சிங்கத்தைப்போன்றும், சண்டைக்குத் தயாரான கரடியைப்போன்றும் இருப்பான். ஆட்சி செய்பவன் ஞானமுள்ளவனாக இல்லாவிட்டால், தனக்குக் கீழுள்ள ஜனங்களைத் துன்புறுத்துவான். ஆனால் நேர்மையாய் ஆட்சி செய்து, ஜனங்களை ஏமாற்றுவதை வெறுக்கிறவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான். அடுத்தவனைக்கொன்ற குற்றவாளிக்கு எப்பொழுதும் சமாதானம் இருக்காது. அவனுக்கு ஆதரவு தராதே. ஒருவன் சரியான வழியில் வாழ்ந்தால் அவன் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் தீயவனாக இருப்பவன் இருந்தால் தன் வல்லமையை இழந்துவிடுவான். கடினமாக உழைப்பவன் உணவை ஏராளமாகப் பெறுவான். ஆனால் எப்போதும் கனவுகள் கண்டு தன் காலத்தை வீணாக்குபவன் ஏழையாகவே இருப்பான். தேவன் தன்னைப் பின்பற்றுபவனை ஆசீர்வதிக்கிறார். ஆனால் செல்வந்தனாக மாறுவதற்கு மட்டும் முயற்சிப்பவன் தண்டிக்கப்படுவான். ஒரு நீதிபதி நேர்மையானவனாக இருக்க வேண்டும். ஒருவன் இன்னான் என்ற காரணத்திற்காகவே அவனுக்குச் சார்பாகப் பேசக்கூடாது. ஆனால் சில நியாயாதிபதிகள் தனக்குத் தரப்படும் சிறு தொகைகளுக்காகக்கூட தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர். சுயநலக்காரன் செல்வந்தன் ஆவதற்கே முயற்சி செய்கிறான். தன் பேராசை வறுமையின் எல்லைக்கே கொண்டுசெல்லும் என்பதை அவன் அறியாமல் இருக்கிறான். ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது. சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன். சுயநலக்காரன் துன்பத்துக்குக் காரணமாக இருப்பான். கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான். ஒருவன் தன்னில் தானே நம்பிக்கை வைத்தால், அவன் ஒரு மூடன். ஆனால் ஒருவன் ஞானியாக இருந்தால், அவன் துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்வான். ஏழை ஜனங்களுக்கு உதவி செய்பவன், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளுவான். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்ய மறுப்பவனுக்கோ அதிகத் தொல்லைகள் வரும். தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.