நீதிமொழிகள் 26:12-28
நீதிமொழிகள் 26:12-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம். வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும். பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
நீதிமொழிகள் 26:12-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம். “வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான். ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள். விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான். வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான். தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே, தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும். தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது. தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான். அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது. அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும். ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும். பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.
நீதிமொழிகள் 26:12-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
நீதிமொழிகள் 26:12-28 பரிசுத்த பைபிள் (TAERV)
ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது. “என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான். ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான். சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான். சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும். ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக்கொன்று போடும் விபத்தைப் போன்றது. நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர். ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும். தீய திட்டங்களைச் சிலர் நல்ல வார்த்தைகளால் மூடி மறைத்து வைத்திருப்பார்கள். இது குறைந்த விலையுள்ள மண்பாத்திரத்தின் மீது வெள்ளியைப் பூசியதுபோன்று இருக்கும். ஒரு தீயவன் தனது பேச்சின் மூலம் தன்னை நல்லவனைப்போன்று காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் தீய திட்டங்களை தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறான். அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும். அவன் தனது தீய திட்டங்களை மென்மையான வார்த்தைகளால் மறைத்து வைத்திருக்கிறான். எனினும் அவனது கெட்டச் செயல்கள் முடிவில் ஜனங்கள் முன்பு வெளிப்பட்டுவிடும். ஒருவன் இன்னொருவனைத் தந்திரத்தால் வசப்படுத்த விரும்பினால் அவனே தந்திரத்திற்கு சிறையாவான். ஒருவன் இன்னொருவன் மீது கல்லை உருட்ட விரும்பினால் அவனே கல்லுக்கடியில் நசுங்கிப்போவான். பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக்கொள்கிறான்.