நீதிமொழிகள் 26:1-28

நீதிமொழிகள் 26:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான். மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான். நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான். தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம். வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும். பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

நீதிமொழிகள் 26:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது. சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது. குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது. மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய். மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள். மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும். மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும். மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும். மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான். நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள். தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம். “வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான். ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான். சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள். விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான். வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான். தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே, தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும். தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை. புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது. தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான். அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது. அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும். ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும். பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.

நீதிமொழிகள் 26:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கோடைக்காலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள். பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான். தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். விறகில்லாமல் நெருப்பு அணையும்; கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.

நீதிமொழிகள் 26:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)

கோடைக்காலத்தில் பனி விழக்கூடாது. அறுவடை காலத்தில் மழை பெய்யக்கூடாது. அது போலவே ஜனங்கள் அறிவற்றவர்களைப் பெருமைப்படுத்தக் கூடாது. ஒருவன் உனக்குக் கேடு ஏற்படும்படி சபித்தால் அதற்காகக் கவலைப்படாதே. நீ தவறு செய்யாமல் இருந்தால் உனக்கு எந்தக் கேடும் ஏற்படாது. அவர்களின் வார்த்தைகள் நிற்காமல் பறந்து செல்லும் தடுக்க முடியாத பறவைகளைப் போன்றிருக்கும். குதிரைக்கு ஒரு சவுக்கு வேண்டும். கழுதைக்குக் கடிவாளம் வேண்டும். முட்டாளுக்கு அடிகொடுக்க வேண்டும். இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான். உனது செய்தியை ஒரு முட்டாள் எடுத்துச் செல்லும்படி அனுமதிக்காதே. நீ அவ்வாறு செய்தால் உனது காலை நீயே வெட்டிக்கொள்வது போன்றது. நீயே துன்பத்தைத் தேடிக்கொள்கிறாய். ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும். ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும். ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும். ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது. ஒரு நாய் எதையாவது தின்னும், பிறகு அதை வாந்தி எடுக்கும், பின் அதனையே தின்னும். இது போலவே முட்டாள்களும் மூடத்தனத்தையே திரும்பத் திரும்பச் செய்வார்கள். ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது. “என்னால் வீட்டைவிட்டுச் செல்ல முடியாது, தெருவில் சிங்கம் உள்ளது” என்று ஒரு சோம்பேறி கூறுகிறான். ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான். சோம்பேறி தனது தட்டில் உள்ள உணவை வாயில் வைக்க முயலாமல் சோம்பேறித்தனமாக நடந்துக்கொள்கிறான். சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும். ஒருவன் தந்திரமாக இன்னொருவனை வஞ்சித்துவிட்டு பிறகு வேடிக்கைக்காகச் செய்தேன் என்று கூறுவது தவறு. இது ஒரு பைத்தியகாரன் காற்றில் அம்பை எய்து யாரையாவது எதிர்பாராதவிதமாகக்கொன்று போடும் விபத்தைப் போன்றது. நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துப்போகும். இதுபோலவே வம்பு இல்லாவிட்டால் வாதங்களும் முடிந்துப்போகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே துன்பம் செய்கிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர். ஜனங்கள் வம்புப்பேச்சை விரும்புவார்கள். அது அவர்களுக்கு நல்ல உணவு உண்பதைப்போல் இருக்கும். தீய திட்டங்களைச் சிலர் நல்ல வார்த்தைகளால் மூடி மறைத்து வைத்திருப்பார்கள். இது குறைந்த விலையுள்ள மண்பாத்திரத்தின் மீது வெள்ளியைப் பூசியதுபோன்று இருக்கும். ஒரு தீயவன் தனது பேச்சின் மூலம் தன்னை நல்லவனைப்போன்று காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் தீய திட்டங்களை தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறான். அவன் சொல்லும் காரியங்கள் நலமாகத் தோன்றலாம். எனினும் அவனை நம்பவேண்டாம். அவனது மனம் முழுவதும் தீமையால் நிறைந்திருக்கும். அவன் தனது தீய திட்டங்களை மென்மையான வார்த்தைகளால் மறைத்து வைத்திருக்கிறான். எனினும் அவனது கெட்டச் செயல்கள் முடிவில் ஜனங்கள் முன்பு வெளிப்பட்டுவிடும். ஒருவன் இன்னொருவனைத் தந்திரத்தால் வசப்படுத்த விரும்பினால் அவனே தந்திரத்திற்கு சிறையாவான். ஒருவன் இன்னொருவன் மீது கல்லை உருட்ட விரும்பினால் அவனே கல்லுக்கடியில் நசுங்கிப்போவான். பொய் சொல்லும் மனிதன் யாரைக் காயப்படுத்துகிறானோ அவரை வெறுக்கிறான். ஒருவன் அர்த்தமற்றவற்றைப் பேசினால் அவன் தன்னையே காயப்படுத்திக்கொள்கிறான்.