நீதிமொழிகள் 25:18-23

நீதிமொழிகள் 25:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான். துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும். இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும், காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும். உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு. அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார். வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும்.

நீதிமொழிகள் 25:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 25:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன். துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான். வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும். உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு. இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார். வடக்கே இருந்து வரும் காற்று மழையைக்கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக்கொண்டுவரும்.

நீதிமொழிகள் 25:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான். உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.