நீதிமொழிகள் 25:14-28

நீதிமொழிகள் 25:14-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன், மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான். பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம், சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும். நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு; அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய். நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள். தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான். துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும். இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும், காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும். உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு. அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார். வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும். சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி, களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும். கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான், சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான். தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல, தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல. தன்னடக்கம் இல்லாத மனிதன் மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான்.

நீதிமொழிகள் 25:14-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.

நீதிமொழிகள் 25:14-28 பரிசுத்த பைபிள் (TAERV)

சிலர் அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவற்றைத் தரமாட்டார்கள். இவர்கள் மழை தராத மேகமும் காற்றும் போன்றவர்கள். பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது ராஜாவையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது. தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய். இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான். உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன். துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான். வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும். உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு. இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார். வடக்கே இருந்து வரும் காற்று மழையைக்கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக்கொண்டுவரும். உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது. தூரமான இடத்திலிருந்து வரும் நல்ல செய்தி வெப்பமாகவும் தாகமாகவும் இருக்கும்போது கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரைப் போன்றதாகும். ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும். நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே. ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்

நீதிமொழிகள் 25:14-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி. நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே. பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான். உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.