நீதிமொழிகள் 25:1-28
நீதிமொழிகள் 25:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. மற்றபடி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது. ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி. கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான். கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி. நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே. பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழி புரண்ட காலுக்கும் சமானம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான். உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 25:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யூதாவின் அரசனான எசேக்கியாவின் மனிதர்கள் தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள்: காரியங்களை மறைப்பது இறைவனின் மகிமை; ஆராய்ந்து அறிவதோ அரசனுக்கு மகிமை. வானங்கள் உயரமாயும் பூமி ஆழமாயும் இருப்பதுபோல், அரசர்களின் இருதயங்களும் ஆராய்ந்து அறிய முடியாது. வெள்ளியிலிருந்து மாசை அகற்று, அப்பொழுது ஒரு கொல்லன் அதிலிருந்து ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியும்; அரசனின் முன்னிருந்து தீய அதிகாரிகளை அகற்று; அப்பொழுது நியாயத்தினால் அவனுடைய சிங்காசனம் நிலைநிறுத்தப்படும். அரசனின் முன்பாக உன்னை நீயே உயர்த்தாதே, பெரியோர்கள் மத்தியில் இடம்பிடிக்க முயற்சி செய்யாதே; அரசன் உன்னை பெரியோர்கள் முன்பாக சிறுமைப்படுத்துவதைவிட, “நீ மேலே, இங்கே வா” என்று உனக்கு சொல்வது மேலானது. நீ உன் கண்களாலே கண்டதைப் பற்றிச் சொல்ல, அவசரப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓடாதே; முடிவில் உன் அயலான் நீ சொல்வது பிழையென்று காட்டி உன்னை வெட்கப்படுத்தினால் நீ என்ன செய்வாய்? அயலானோடு உன் வழக்கை வாதிடும்போது, நீ இன்னொருவனின் இரகசியத்தை வெளிப்படுத்தாதே; அப்படிச் செய்தால் அதைக் கேட்கிறவன் உன்னை வெட்கப்படுத்துவான், உனக்கு உண்டாகும் கெட்ட பெயரும் உன்னைவிட்டு நீங்காது. ஏற்ற நேரத்தில் பேசப்படும் சரியான வார்த்தை, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட தங்கப்பழங்களைப் போன்றது. ஞானமுள்ளவனின் கண்டனம் செவிகொடுத்துக் கேட்பவனுக்கு அது தங்கக் காதணியும் தரமான தங்க நகையும் போல இருக்கிறது. நம்பகமான தூதுவன் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அறுவடை நாளில் உறைபனிக் குளிர்ச்சிபோல் இருப்பான்; அவன் தன் எஜமானின் மனதைக் குளிரப்பண்ணுவான். தான் கொடுக்காத அன்பளிப்புகளைக் குறித்து பெருமையாகப் பேசுகிற மனிதன், மழையைக் கொண்டுவராத மேகத்தையும் காற்றையும் போலிருக்கிறான். பொறுமையினால் ஆளுநரையும் இணங்கச் செய்யலாம், சாந்தமான நாவு எலும்பையும் நொறுக்கும். நீ தேனைப் பெற்றால் அதை அளவாய்ச் சாப்பிடு; அளவுக்கு மிஞ்சிச் சாப்பிட்டால் வாந்தியெடுப்பாய். நீ உன் அயலாருடைய வீட்டிற்கு அடிக்கடி போகாதே; அளவுக்கு மிஞ்சிப்போனால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள். தன் அயலானுக்கு எதிராக பொய்ச்சாட்சி சொல்கிறவன் தண்டாயுதத்தைப் போலவும், வாளைப்போலவும், கூரான அம்பைப்போலவும் இருக்கிறான். துன்ப காலத்தில் உண்மையற்ற நபரில் நம்பிக்கை வைப்பது, வலிக்கும் பல்லைப்போலவும் சுளுக்கிய காலைப்போலவும் இருக்கும். இருதயத்தில் துயரமுள்ளவனுக்கு மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடுவது, குளிர்க்காலத்தில் அவனுடைய உடையை எடுத்து விடுவது போலவும், காயத்தில் புளித்த காடியை வார்ப்பது போலவும் இருக்கும். உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு. அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார். வாடைக்காற்று நிச்சயமாகவே மழையைக் கொண்டுவருவதுபோல, வஞ்சகநாவு கோபமுகத்தைக் கொண்டுவரும். சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. தூரதேசத்திலிருந்து வருகிற நற்செய்தி, களைத்த ஆத்துமாவுக்குக் கிடைத்த குளிர்ந்த தண்ணீர்போல் இருக்கும். கொடியவனுக்கு முன்னால் தளர்வடையும் நீதிமான், சேறு நிறைந்த நீரூற்றைப் போலவும் அசுத்தமடைந்த கிணற்றைப் போலவும் இருக்கிறான். தேனை அளவுக்கதிகமாய் உண்பது நல்லதல்ல, தற்புகழைத் தேடுவதும் மதிப்பிற்குரியதல்ல. தன்னடக்கம் இல்லாத மனிதன் மதிலிடிந்த பட்டணத்தைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 25:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது. ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன். ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான். உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார். வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம். துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும். தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
நீதிமொழிகள் 25:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
இது சாலொமோன் சொன்ன மேலும் சில ஞானமொழிகள். இவ்வார்த்தைகள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா என்பவனின் வேலைக்காரர்கள் பார்த்து எழுதியவை. நாம் அறிந்துகொள்ளக்கூடாது என்று தேவன் எண்ணும் காரியங்களை மறைத்து வைக்கும் உரிமை தேவனுக்கு உண்டு. ஆனால் தான் சொல்லும் காரியங்களுக்காக ஒரு ராஜா பெருமைக்குரியவன் ஆகிறான். வானம் நமக்கு மேலே மிகவும் உயரத்தில் உள்ளது. பூமியில் ஆழங்கள் உள்ளன. இது போலவே ராஜாவினுடைய மனமும் உள்ளது. இவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. நீ வெள்ளியிலிருந்து கசடுகளையும் அசுத்தங்களையும் நீக்கிவிட்டால், அதைக்கொண்டு ஒரு தொழிலாளியால் நல்ல அழகான பொருட்களைச் செய்யமுடியும். இதுபோலவே, ஒரு ராஜாவிடமிருந்து தீய ஆலோசகர்களை நீக்கிவிட்டால், நன்மை அவனது ஆட்சியை வலிமையுள்ளதாக்கும். ராஜாவுக்கு முன்னால் உன்னைப்பற்றிப் பெருமை பேசாதே. நீ புகழ்பெற்றவன் என்றும் கூறாதே. ராஜா உன்னை அவனாக வரவழைப்பதுதான் மிக நல்லது. ஆனால் நீயாகப் போனால் மற்றவர்கள் முன்பு நீ அவமானப்பட்டுப் போவாய் நீ உன் கண்ணால் பார்த்ததை நீதிபதியிடம் சொல்ல அவசரப்படாதே. வேறு ஒருவன் நீ சொல்வது தவறென்று நிரூபித்துவிட்டால் பிறகு நீ அவமானப்படுவாய். நீயும் இன்னொருவனும் ஒத்துப்போகாவிட்டால் இனி என்ன செய்யலாம் என்பதை உங்களுக்குள் பேசி முடிவுசெய். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதே. நீ அவ்வாறு செய்தால், பிறகு அவமானப்படுவாய். அதற்குப் பிறகு உன் அவப்பெயர் எப்போதும் நீங்காது. நீ சரியான நேரத்தில் சரியானதைக் கூறுவது, தங்க ஆப்பிளை வெள்ளித் தட்டில் வைப்பதுபோன்றது. ஞானமுள்ளவன் உன்னை எச்சரித்தால், அது தங்க மோதிரங்களைவிடவும், சுத்தமான தங்கத்தால் செய்த நகைகளைவிடவும் மதிப்புள்ளது. நம்பிக்கைக்குரிய தூதுவன் அவனை அனுப்பியவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான். அவன் வேனிற்கால அறுவடையின்போது கிடைக்கும் குளிர்ந்த தண்ணீரைப் போன்றவன். சிலர் அன்பளிப்பு கொடுப்பதாக வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவற்றைத் தரமாட்டார்கள். இவர்கள் மழை தராத மேகமும் காற்றும் போன்றவர்கள். பொறுமையான பேச்சு யாருடைய சிந்தனையையும் மாற்ற வல்லது. அது ராஜாவையும் மாற்றும் மென்மையான பேச்சு மிகுந்த வலிமை உடையது. தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய். இதுபோலவே உனது அயலான் வீட்டிற்கு அடிக்கடிப் போகாதே. அவ்வாறு செய்தால் அவன் உன்னை வெறுக்கத் துவங்குவான். உண்மையைச் சொல்லாதவன் ஆபத்தானவன். அவன் தண்டாயுதத்திற்கும் வாளுக்கும் கூர்மையான அம்புக்கும் சமமானவன். துன்ப காலத்தில் பொய் சொல்பவனை நம்பி இருக்காதே. வலி கொடுக்கும் பல்லைப் போன்றும், வாதத்தால் சூம்பிய காலைப் போன்றும் அவன் இருப்பான். அவனது தேவை வரும்போது துன்புறுத்துவான். வருத்தத்தோடு இருக்கிறவன் முன்னால் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடுவது ஒருவன் குளிரால் வருந்தும்போது ஆடையைப் பறிப்பது போன்றதாகும். அது வெடிப்பின் மேல் காடியைக் கலப்பது போன்றது ஆகும். உன் எதிரி பசியோடு இருந்தால் அவனுக்கு உணவு கொடு. உன் எதிரி தாகமாக இருந்தால் குடிக்க தண்ணீரைக்கொடு. இவ்வாறு செய்வதின்மூலம் நீ அவனை வெட்கப்படுத்த முடியும். இது எரிகிற நெருப்புத் தழல்களை அவன் தலையின்மேல் போடுவதற்குச் சமமாகும். உன் எதிரிக்கு நீ நல்லதைச் செய்தபடியால் கர்த்தர் உனக்கு நற்பலனைத் தருவார். வடக்கே இருந்து வரும் காற்று மழையைக்கொண்டுவரும். இதுபோலவே வம்பானது கோபத்தைக்கொண்டுவரும். உன்னோடு ஓயாமல் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டிற்குள் வாழ்வதைவிட கூரை மேல் வாழ்வது நல்லது. தூரமான இடத்திலிருந்து வரும் நல்ல செய்தி வெப்பமாகவும் தாகமாகவும் இருக்கும்போது கிடைக்கும், குளிர்ந்த தண்ணீரைப் போன்றதாகும். ஒரு நல்ல மனிதன் பலவீனமாகி கெட்டவன் பின்னால் போவது என்பது நல்ல தண்ணீர் அழுக்காவதைப் போன்றதாகும். நீ தேனை மிகுதியாகப் பருகினால் அது உனக்கு நல்லதல்ல. இதுபோலவே உனக்கு மிக அதிகளவு பெருமையைத் தேடிக்கொள்ள முயலாதே. ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான்