நீதிமொழிகள் 23:29-35

நீதிமொழிகள் 23:29-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்? யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்? திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே. மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே! முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும். அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும். நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய். “அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! அவர்கள் என்னைத் தாக்கினார்கள், நான் அதை உணரவில்லை! இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய்.

நீதிமொழிகள் 23:29-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஐயோ, யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

நீதிமொழிகள் 23:29-35 பரிசுத்த பைபிள் (TAERV)

நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும். மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது. மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.

நீதிமொழிகள் 23:29-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்