நீதிமொழிகள் 22:1-29
நீதிமொழிகள் 22:1-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது. பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை. விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது. கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள். பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள். பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள், கடன்வாங்கினவர்கள் கடன் கொடுத்தவருக்கு அடிமை. அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும். தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஏனெனில் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும். தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும் அரசனைத் தங்கள் நண்பனாக்கிக் கொள்வார்கள். யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார். “வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான். விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள். பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது, ஆனால் கண்டித்துத் திருத்துவதால் அதை அகற்றலாம். தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறவர்களும் ஏழையாகிறார்கள். ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை. ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள். உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன். அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா? அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம். ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே. ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம். பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே. ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும். உன் முற்பிதாக்கள் நாட்டிய பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே. தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா? அவர்கள் அரசர்களுக்குமுன் பணிசெய்வார்கள்; அவர்கள் பிரபலமற்றவர்களுக்கு முன்பாக பணிசெய்வதில்லை.
நீதிமொழிகள் 22:1-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; பொன் வெள்ளியைவிட தயையே நலம். செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா. விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், மகிமையும் ஜீவனும் ஆகும். மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான். செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்கு நண்பனாவான். யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். வெளியிலே சிங்கம், வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான். உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, அது இன்பமாக இருக்கும். உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார். கோபக்காரனுக்குத் தோழனாகாதே; கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய். உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே. தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள் 22:1-29 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருவன் செல்வந்தனாக இருப்பதைவிட மரியாதைக்குரியவனாக வாழ்வது நல்லது. பொன் மற்றும் வெள்ளியைவிட நல்ல பெயர் முக்கியமானது. செல்வந்தராக இருப்பினும் ஏழைகளாக இருப்பினும் எல்லாரும் சமமே. அனைவரையும் கர்த்தரே படைத்துள்ளார். அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள். கர்த்தரை மதித்துப் பணிவுள்ளவர்களாக இருங்கள். அப்போது உங்களுக்குச் செல்வமும் மதிப்பும் உண்மையான வாழ்வும் கிடைக்கும். தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர். ஒரு பிள்ளை இளமையாக இருக்கும்போதே வாழ்வதற்கான நல்ல வழிகளை அவனுக்குப் போதியுங்கள். அப்போது அவன் வளர்ந்தபிறகும் தொடர்ந்து நல்ல வழியிலேயே நடப்பான். ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறான். துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான். தாராளமாகக்கொடுப்பவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் உணவை ஏழைகளோடு பகிர்ந்துகொள்வதால் அவன் ஆசீர்வதிக்கப்படுகிறான். ஒருவன் மற்றவர்களைவிடத் தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டிருந்தால் அவனை விலகும்படி வற்புறுத்து. அவன் விலகும்போது அவனோடு துன்பங்களும் விலகுகின்றன. பின் வாதங்களும் விரோதமும் விலகும். நீ சுத்தமான இருதயத்தையும் கருணைமிக்க வார்த்தைகளையும் விரும்புகிறவனாயிருந்தால் ராஜாவும் உனக்கு நண்பன் ஆவான். தேவனை அறிகின்ற ஜனங்களை கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார். சோம்பேறியோ, “என்னால் வேலைக்குப் போகமுடியாது. வெளியே ஒரு சிங்கம் உள்ளது. அது என்னைக்கொன்றுவிடும்” என்று கூறுகிறான். விபச்சாரம் என்பது வலைபோன்றது. இவ்வலையில் விழுபவர்களின் மீது கர்த்தர் மிகுந்த கோபங்கொள்கிறார். சிறுவர்கள் முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். நீ செல்வந்தனாகும்பொருட்டு ஏழைகளைத் துன்புறுத்துவதும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்புகளைக்கொடுப்பதும் ஆகிய இரண்டு செயல்களும் உன்னை ஏழையாக்கும். நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும். இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் உனக்காக முப்பது அறிவுரைகளை எழுதியிருக்கிறேன். இவை அறிவும் ஞானமும் உடையவை. இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும். ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார். மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். அடுத்தவன் பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே. உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்? உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே. ஒருவன் தனது வேலையில் திறமையுடையவனாக இருந்தால் அவன் ராஜாவிடம் பணியாற்றும் தகுதியைப் பெறுகிறான். அவன், முக்கியமில்லாதவர்களுக்குப் பணியாற்றும் தேவை இருக்காது.
நீதிமொழிகள் 22:1-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம். ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும். கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான். கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான். பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும். தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான். உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும். உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே. தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.