நீதிமொழிகள் 21:9-31
நீதிமொழிகள் 21:9-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது. பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும். நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம். விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான். சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான். தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும். அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான். துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும். பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான். துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான். கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
நீதிமொழிகள் 21:9-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது. கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்; தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள். ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்; ஞானமுள்ளவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள். நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து, கொடியவர்களை தண்டிக்கிறார். ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது. இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்; அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும். நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் தீயவர்களுக்கு பயமுண்டாக்கும். விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள், முடிவில் இறந்தவர்களின் கூட்டத்தில் சேருவார்கள். சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்; திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை. கொடியவர்கள் நீதிமான்களையும், துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள். சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது. சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்; மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள். நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள். ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி, அவர்கள் நம்பியிருக்கும் கோட்டையையும் இடித்துப் போடுவார்கள். தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள் பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர், அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள். சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால், அவர்களின் ஆசையினால் அவர்கள் அழிவார்கள். அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது; அது தீயநோக்கத்துடன் செலுத்தப்படுமானால், அது இன்னும் எவ்வளவு அதிக அருவருப்பாயிருக்கும்! பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்; ஆனால் கவனமாய்க் கேட்பவர்கள் வெற்றிகரமாக சாட்சியளிப்பார். கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள். யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை. போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
நீதிமொழிகள் 21:9-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்; அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது. பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும். நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும், அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும். விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான். சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை. நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள். சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும். அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்; நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான். துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும். பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான். துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான். யெகோவாவுக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; வெற்றியோ யெகோவாவால் வரும்.
நீதிமொழிகள் 21:9-31 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்போதும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்கிற மனைவியோடு வீட்டில் வாழ்வதைவிட கூரையின்மேல் வாழ்வது நல்லது. தீயவர்கள் மேலும் தீமையே செய்ய விரும்புகின்றனர். இவர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது இரக்கம் காட்டமாட்டார்கள். தேவனைக் கேலிச் செய்கிறவனைத் தண்டித்துவிடு. இதனால் அறிவற்றவர்கள் பாடம் கற்பார்கள். அவர்கள் அறிவாளிகளாகின்றனர். அவர்கள் மேலும், மேலும் அறிவைப் பெறுகின்றனர். தேவன் நல்லவர், தீயவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை தேவன் அறிவார், அவர்களைத் தண்டிப்பார். ஒருவன் ஏழைகளுக்கு உதவ மறுத்தால், அவனுக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் உதவி செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். ஒருவன் உன்மீது கோபமாக இருந்தால் இரகசியமாக அவனுக்கு ஒரு அன்பளிப்பைக்கொடு. அது அவனது கோபத்தைத் தடுக்கும். நேர்மையான தீர்ப்பு நல்லவர்களை மகிழ்ச்சியாக்கும். ஆனால் அது தீயவர்களைப் பயப்படுத்தும். அறிவைவிட்டு விலகி நடப்பவன் அழிவை நோக்கியே செல்கிறான். வேடிக்கை செய்வதையே முதன்மையாகக் கருதுபவன் ஏழ்மையடைவான். அவன் திராட்சைரசத்தையும் உணவையும் விரும்பினால் அவனால் செல்வந்தனாக முடியாது. நல்லவர்களுக்குத் தீயவர்கள் செய்யும் தீமைகளுக்கெல்லாம் விலை கொடுக்கவேண்டும். நேர்மையற்றவர்கள் நேர்மையானவர்களுக்குச் செய்தவற்றுக்காக விலைதர வேண்டும். முன்கோபமும் வாக்குவாதம் செய்வதில் ஆர்வமும்கொண்ட மனைவியோடு வாழ்வதைவிட பாலைவனத்தில் வாழ்வது நல்லது. அறிவுள்ளவன் தனக்குத் தேவையானவற்றைச் சேகரித்துக்கொள்கிறான். அறிவற்றவனோ தான் பெற்றதை பெற்ற வேகத்திலேயே செலவு செய்துவிடுகிறான். எப்பொழுதும் அன்பையும், கருணையையும் காட்டுகிற ஒருவன் நல்வாழ்வும் செல்வமும் சிறப்பும் பெறுவான். அறிவுள்ளவனால் அனைத்தையும் செய்ய முடியும். அவனால் வலிமைமிக்க வீரர்களின் காவலில் உள்ள நகரங்களையும் தாக்கமுடியும். அவர்களைக் காக்கும் என்று நம்பியவைகளையும் தகர்க்கமுடியும். ஒருவன் தான் சொல்வதைப்பற்றி எச்சரிக்கை உடையவனாக இருந்தால், அவன் தன்னைத் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்கிறான். பெருமைகொண்டவன் மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைக்கிறான். அவன் தனது செயல்கள் மூலம் தீயவன் என்று காட்டுகிறான். சோம்பேறி மேலும், மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும். தீயவர்கள் பலிதரும்போது, குறிப்பாக அவர்கள் கர்த்தரிடமிருந்து சிலவற்றைப் பெற முயற்சிக்கும்போது கர்த்தர் மகிழ்ச்சியடைவதில்லை. பொய் சொல்பவன் அழிக்கப்படுவான். அப்பொய்யை நம்புகிறவனும் அவனோடு அழிந்துவிடுவான். தான் செய்வது சரி என்பதை எப்போதும் நல்லவன் அறிவான். ஆனால் தீயவனோ நடிக்கிறான். கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை. ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.