நீதிமொழிகள் 20:11-17

நீதிமொழிகள் 20:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல். பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள். மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.

நீதிமொழிகள் 20:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

நீதிமொழிகள் 20:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும். பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார். நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும். உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான். தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது. அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய். ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும்.

நீதிமொழிகள் 20:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள். வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.