நீதிமொழிகள் 20:1-30
நீதிமொழிகள் 20:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல. அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள். சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர். சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை. மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள். அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்? நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான். “நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்? பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார். சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம். கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார். தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய். பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள். தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல். பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள். மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும். நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள். புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு. ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும். ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது. “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார். போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல. மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும். ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான். மனிதருடைய ஆவி யெகோவா தந்த விளக்கு; அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது. அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது. வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை. அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.
நீதிமொழிகள் 20:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்? நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள். நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்? வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்செய். தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே. தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும். ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். வெவ்வேறான நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல. யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி? பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும். ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.
நீதிமொழிகள் 20:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)
திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள். ஒரு ராஜாவின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு ராஜாவைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய். எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும். ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை. நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான். பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். ஒரு ராஜா நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும். ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது. தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும். பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார். நீ தூக்கத்தை நேசித்தால், நீ ஏழையாகிவிடுவாய். உனது நேரத்தை உழைப்பதில் செலவிடு. உனக்கு உணவு ஏராளமாகக் கிடைக்கும். உன்னிடமிருந்து எதையாவது வாங்கியவன், “இது நன்றாயில்லை. இதன் விலை அதிகம்” என்கிறான். பிறகு வேறு ஆட்களிடம் போய் தான் நல்ல வியாபாரம் செய்ததாகச் சொல்லிக்கொள்வான். தங்கமும் வெள்ளியும் ஒருவனைப் பணக்காரன் ஆக்கும். ஆனால் எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதை முழுக்க அறிந்துள்ள ஒருவனின் மதிப்பு மிகவும் பெரியது. அடுத்தவனின் கடனுக்கு நீ பொறுப்பேற்றுக்கொண்டால், நீ உனது சட்டையையும் இழந்துவிடுவாய். ஒருவனை ஏமாற்றிப் பெற்றவை நல்லதுபோன்று தோன்றலாம். ஆனால், முடிவில் அது பயனற்றுப் போய்விடும். திட்டமிடுவதற்கு முன்பு நல்ல அறிவுரைகளைப் பெறவேண்டும். நீ ஒரு போரைத் துவங்கினால், போர் நடவடிக்கைகளில் சிறந்த அறிவுடையவர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள். அடுத்தவர்களைப்பற்றி வம்பு பேசுகிறவர்கள் நம்பத்தகாதவர்கள். எனவே அதிகமாகப் பேசுபவர்களோடு நட்புகொள்ளாதே. ஒருவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதிராகப் பேசினால், அவன் அணைந்துகொண்டிருக்கும் விளக்கைப் போன்றவன். உனது செல்வமானது பெறுவதற்கு எளிதானதாக இருந்தால், அது உனக்கு அத்தனை உயர்வாகத் தோன்றாது. எவனாவது உனக்கு எதிராக எதையாவது செய்தால் நீயாக அவனைத் தண்டிக்க முயலாதே. கர்த்தருக்காகக் காத்திரு. இறுதியில் உன்னை அவர் வெற்றிப்பெறச் செய்வார். சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது. ஒவ்வொருவருக்கும் என்ன நிகழும் என்பதை கர்த்தர் முடிவு செய்கிறார். எனவே ஒருவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அவன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும். தேவனுக்கு ஏதாவது கொடுப்பதாக வாக்குறுதி சொல்லுமுன் நன்றாகச் சிந்திக்கவேண்டும். இல்லை என்றால் இந்த வாக்குறுதியைத் தராமலேயே இருந்திருக்கலாம் என்று பின்னால் நீ வருந்துவாய். யார் தீயவர் என்னும் முடிவை அறிவாளியான ராஜாவே எடுப்பான். அந்த ராஜாவே அவர்களைத் தண்டிப்பான். ஒரு மனிதனின் ஆவி கர்த்தருக்கு முன்பாக ஒரு விளக்கைப்போலிருக்கிறது. அவனுள் இருப்பது என்ன என்பதையும் கர்த்தர் அறிவார். ராஜா உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும். நாம் ஒரு இளைஞனை அவனது வலிமைக்காக விரும்புகிறோம். முதியவரை அவரது முழுமையான வாழ்க்கையைக் காட்டும் நரைத்த முடிக்காக மதிக்கிறோம். அவரது நரைத்த தலைமுடி அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்று பொருள் தரும். நாம் தண்டிக்கப்பட்டால் தவறு செய்வதை நிறுத்திவிடுவோம். வேதனையானது ஒருவனை மாற்றும்.
நீதிமொழிகள் 20:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான். வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்? நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான். என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும். கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள். வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு. தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே. தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும். ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல. கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான். வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.