நீதிமொழிகள் 2:9-15

நீதிமொழிகள் 2:9-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய். ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, இருளான வழியில் நடக்கிறார்கள்; அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, அவர்களுடைய வழிகளோ தவறானவை.

நீதிமொழிகள் 2:9-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

நீதிமொழிகள் 2:9-15 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய். ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும். ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.

நீதிமொழிகள் 2:9-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.