நீதிமொழிகள் 2:10-19

நீதிமொழிகள் 2:10-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும், அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும். அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும், புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும், வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும். அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி, இருளான வழியில் நடக்கிறார்கள்; அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து, தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்; அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை, அவர்களுடைய வழிகளோ தவறானவை. ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும் வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும். தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு, இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள். அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது, அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது. அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை, வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.

நீதிமொழிகள் 2:10-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். அவளுடைய வீடு மரணத்திற்கும், அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

நீதிமொழிகள் 2:10-19 பரிசுத்த பைபிள் (TAERV)

ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும். ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும். அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும். அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள். அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள். அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.

நீதிமொழிகள் 2:10-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.