நீதிமொழிகள் 18:10-24

நீதிமொழிகள் 18:10-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும். அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும். மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும். அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும். அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான். சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

நீதிமொழிகள் 18:10-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள். பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள். வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது. கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும். மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்? பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும். அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள். சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும். அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன. அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம். வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள். மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள். நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.

நீதிமொழிகள் 18:10-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.

நீதிமொழிகள் 18:10-24 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர். செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர். பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான். நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய். நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும். அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான். நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம். இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும். வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன. நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும். மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள். ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான். பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.

நீதிமொழிகள் 18:10-24

நீதிமொழிகள் 18:10-24 TAOVBSIநீதிமொழிகள் 18:10-24 TAOVBSIநீதிமொழிகள் 18:10-24 TAOVBSI