நீதிமொழிகள் 17:12-22

நீதிமொழிகள் 17:12-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தன் மூடத்தனத்தில் சிக்கிய முட்டாளைச் சந்திப்பதைவிட, தன் குட்டியைப் பறிகொடுத்த கரடியைச் சந்திப்பது சிறந்தது. ஒருவர் நன்மைக்குப் பதில் தீமை செய்தால், அவருடைய வீட்டைவிட்டு தீமை ஒருபோதும் விலகாது. வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு. குற்றவாளியை விடுதலை செய்கிறதும் குற்றமற்றவரை தண்டனைக்கு உள்ளாக்குகிறதுமான இரண்டையும் யெகோவா அருவருக்கிறார். மூடர் கையில் பணம் இருந்து என்ன பயன்? ஞானத்தைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லையே. நண்பன் எக்காலத்திலும் அன்பாயிருக்கிறான்; இக்கட்டு காலத்தில் உதவி செய்யவே சகோதரன் பிறந்திருக்கிறான். மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள். வாக்குவாதத்தை விரும்புகிறவர்கள் பாவத்தை விரும்புகிறார்கள்; வாசலை உயர்த்திக் கட்டுகிறவர்கள் அழிவையே அழைக்கிறார்கள். தீமையான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் காண்பதில்லை; பொய் நாவுள்ளவர்கள் துன்பத்தில் வீழ்கிறார்கள். முட்டாளைப் பெற்றவருக்கு வருத்தம்; இறைவனற்ற மதியீனரின் பெற்றோருக்கு மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சியான இருதயம் நல்ல மருந்து, ஆனால் நொறுங்கிய ஆவி எலும்புகளை உலரப்பண்ணுகிறது.

நீதிமொழிகள் 17:12-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். விவாதப்பிரியன் பாவப்பிரியன்; தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. மனமகிழ்ச்சி நல்ல மருந்து; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.

நீதிமொழிகள் 17:12-22 பரிசுத்த பைபிள் (TAERV)

தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது. உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய். வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து. தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும். அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான். ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான். அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான். வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக்கொள்கிறாய். தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான். அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது.

நீதிமொழிகள் 17:12-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி. நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான். வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.